தேனியில் பி.எஸ்.என்.எல் அலைக்கற்றை சேவையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவைச் சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார், தீவிரவாத செயலா.? என விசாரித்து வருகின்றனர்.
தேனி பி.எஸ்.என்.எல் அலைக்கற்றை சேவையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய ஐ.எஸ்.டி சேவை குறியீட்டுக்கான ஃபிரிக்குவன்சி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் போலீசில் புகாரளித்தனர்.
விசாரணையில், ஆண்டிப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த சஜீர், முகமது ஆசிப் ஆகிய இருவர், அவர்கள் வைத்திருக்கும் டிவைஸ்கள் மூலம் பி.எஸ்.என்.எல் அலைக்கற்றையை பயன்படுத்தி கடந்த 3 மாதங்களாக வெளிநாடுகளுக்கு பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 36 சீன தயாரிப்பு மெஷின்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த மெஷின்கள் ஐ.எஸ்.டி அழைப்புகளை சாதாரண அழைப்புகளாக மாற்றி அனுப்பும் திறன் கொண்டவை என்றும் அழைப்புகள் எங்கிருந்து சென்றது என்பதை கண்டுபிடிக்க முடியாத வசதி கொண்டவை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.