பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இவர்கள் 19 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்ட மற்றும் 28 வயது பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் கல்கிசை மற்றும் காலி பிரதேசத்தைச் வசிப்பிடமாகக் கொண்டவர்கள் ..
ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு கொள்ளுப்பிட்டி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தை கடுமையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எந்த வகையிலும் எந்த சந்தர்ப்பத்திலும் வன்முறையில் பிரவேசிக்கக்கூடாது. இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் எதிர்பார்க்கப்படும் பெறுபேறை அடைய முடியாது என்றும் அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தை ஐக்கிய மக்கள் சக்தி கண்டித்துள்ளது. இந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இது தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணமான ராஜபக்க்ஷ நிர்வாகத்தை மாற்றுவதற்கு ஜனநாயக கட்டமைப்பிற்குள்ளேயே நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.