தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாள் இன்றாகும்.
உலகளாவிய இஸ்லாமிய மக்களுடன் இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
புனித ஹஜ் பண்டிகையை முன்னிட்டு News.lk தமிழ் செய்திப் பிரிவு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
இப்ராஹீம் நபி குடும்பத்தின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் வருடந்தோறும் புனித ஹஜ் கடமை நிறைவேற்றப்படுகின்றது. இறைவன் வகுத்த சோதனையில் இப்ராஹிம் நபி அவர்களும் அவரது புதல்வர் இஸ்மாயில் மற்றும் மனைவி ஹாஜரா ஆகியோர் வெற்றி கொண்டு தமது தியாகத்தை வெளிப்படுத்திய சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஹஜ் கடமை நிறைவேற்றப்படுகின்றது.
இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து முஸ்லிம்கள் வருடா வருடம் புனித மக்கமா நகரில் ஒன்றுகூடி தமது ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றனர்.
இஸ்லாத்தில் வசதி உள்ளவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது கட்டாயமாகும். புனித மக்கமா நகரில் நிறைவேற்றப்படும் கிரியைகளுக்கு இணைவாக உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
பெருநாளை கொண்டாடும் இன்றைய தினம் முஸ்லிம்கள் குர்பான் எனும் தான தர்மத்தில் ஈடுபடுவதோடு, இறைவனை புகழ்ந்து தமது பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.