புதுடெல்லி: ‘காஸ், பெட்ரோல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்ட எல்லா பிரச்னைகளையும் உருவாக்கியவர் பிரதமர் மோடிதான் என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்’ என ராகுல் காந்தி கூறி உள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘சமீபத்தில் ஆந்திராவில் சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜு சிலை திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஆங்கிலேயர்களிடம் அல்லூரி ‘உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்’ என கூறியதை நினைவு கூர்ந்தார். இப்போது, அதே வாசகத்தை, பிரதமர் மோடியைப் பார்த்து மக்கள் கூறுகிறார்கள். பாஜ ஆட்சியில் நாட்டில் காஸ் சிலிண்டர் விலை 157 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பின்மை போன்றவை மக்களை கடுமையாக பாதித்துள்ளது. அவர்கள் பிரதமரைப் பார்த்து, ‘உங்களால் உருவாக்கப்பட்ட தடைகள் இவை, தைரியம் இருந்தால் உடனே அவற்றை நிறுத்துங்கள்’ என்கிறார்கள்,’ என கூறி உள்ளார்.