பொன்னியின் செல்வன் – இரண்டு பூரண சந்திரர்கள், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. கல்கி எழுதிய நாவலைப் படித்தவர்கள், படிக்காதவர்கள் எனப் பலரும் டீசரைப் பார்த்து வியந்து பாராட்டி வருகிறார்கள். படத்தைப் பார்ப்பதற்கு முன்பு நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த சில நாட்களில் பலரும் 'பொன்னியின் செல்வன்' நாவலின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்புகளை அதிகம் வாங்கி வருவதாக பதிப்பக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'பொன்னியின் செல்வன்' நாவலில் இரண்டு முக்கியப் பெண் கதாபாத்திரங்கள் நந்தினி மற்றும் குந்தவை. அவர்கள் இருவரின் அழகைப் பற்றி பல்வேறு இடங்களில் கல்கி அவ்வளவு ரசனையாக எழுதியிருப்பார். நாவலைப் படிக்கும் போது ஒவ்வொருவருக்கும் அந்த முகங்கள் ஒரு விதமான கற்பனை உருவத்தில் மனதிற்குள் தோன்றி இருக்கும்.
'பொன்னியின் செல்வன்' படத்தில் அந்த இரு கதாபாத்திரங்களில் யாரை நடிக்க வைக்கப் போகிறார் மணிரத்னம் என்ற எதிர்பார்ப்பு பட அறிவிப்பு வந்த போதே எழுந்தது. நந்தினி ஆக 1994ல் உலக அழகிப் பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராயும், குந்தவை ஆக 1999ல் மிஸ் சென்னை அழகிப் பட்டம் வென்ற நடிகை த்ரிஷாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். ஐஸ்வர்யா ராய் பற்றி நாவல் ரசிகர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா பொருத்தமாக இருப்பாரா என்று பலர் சந்தேகப்பட்டார்கள். அப்படி சந்தேகப்பட்டவர்களை இப்போது ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் த்ரிஷா.
நாவலில் நந்தினி, குந்தவை இருவரும் சந்திக்கும் 'அத்தியாயம் 14 – இரண்டு பூரண சந்திரர்கள்' தலைப்பில் கல்கி அவ்வளவு வர்ணனைகளுடன் எழுதியிருப்பார். அந்த வர்ணனைக்கு ஏற்றபடி படத்தில் காட்சி அமைந்திருக்கிறது என்பது படத்தின் டீசரிலேயே தெரிகிறது.
ஐஸ்வர்யாவும், த்ரிஷாவும் தோன்றும் அந்த ஒரு காட்சியில் இருவருமே பேரழகிகளாக இருக்கிறார்கள் என ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள். அதற்குக் காரணமான ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், மேக்கப் கலைஞர்கள், ஆடை அலங்காரக் கலைஞர்கள் ஆகியோரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாவலில் கல்கி எழுதிய வர்ணனை கீழே உள்ளது. அதைப் படித்து விட்டு மீண்டும் டீசரைப் போய்ப் பாருங்கள்.
“குந்தவை யானையிலிருந்தும் நந்தினி பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி விரைந்து முன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள். அந்த வரவேற்பைக் குந்தவை புன்னகை புரிந்து அங்கீகரித்தாள்.
சோழ நாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள். குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது. குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன.
குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத்பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது.
நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ “இவள் அழகின் அரசி” என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது.
இப்படியெல்லாம் அந்த இரு வனிதா மணிகளின் அழகையும் அலங்காரத்தையும் தனித்தனியே பிரித்து ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது தான். ஆயினும் பொதுப்படையாக இருவரும் நிகரில்லாச் சவுந்தரியவதிகள் என்பதையும், அங்க அமைப்பிலும் அலங்காரத்திலும் மாறுபட்டவர்கள் என்பதையும் அனைவருமே எளிதில் உணர்ந்தார்கள்.
நந்தினியின் பேரில் அதுவரையில் நகர மாந்தர்களுக்கு ஓரளவு அதிருப்தியும் அசூயையும் இருந்து வந்தன. குந்தவைப் பிராட்டியை ஒவ்வொருவரும் தங்கள் குல தெய்வமெனப் பக்தியுடன் பாராட்டினார்கள். ஆனால், இப்போது பழுவூர் இளைய ராணி கோட்டை வாசலுக்கு வந்து இளைய பிராட்டியை வரவேற்றது மக்களுக்கு மிகுந்த குதூகலத்தை விளைவித்தது.
மக்கள் இவ்விதம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கையில் நந்தினிக்கும், குந்தவைக்கும் நடந்த சம்பாஷணை, மின்னலை மின்னல் வெட்டும் தோரணையில் அமைந்தது.“