மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு: 15 நாட்களில் அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தல்!

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூலம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டால், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் மீறல் தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு, நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்களை உடனுக்குடன் செயல்படுத்துவதுடன் விரிவான விளம்பரத்தை ஏற்பாடு செய்யுமாறு சிசிபிஏ கடிதம் எழுதியுள்ளது.

சேவைக் கட்டணம் விதிப்பது வழிகாட்டுதல்களை மீறுவதாகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறையை உருவாக்குவதாகவும், அது நுகர்வோரின் உரிமைகளைப் பாதிக்கும் என்றும், அத்தகைய புகார்களை முதன்மையாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கடிதம் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.

சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஏராளமான நுகர்வோர் தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் தங்கள் புகாரைப் பதிவு செய்துள்ளனர். 01.04.2021 முதல் 20.06.2022 வரை, சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 537 புகார்கள் நுகர்வோரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹோட்டல்கள்/உணவகங்கள் சேவைக் கட்டணத்தை கட்டாயமாக்குதல், சேவைக் கட்டணத்தைச் செலுத்துவதை எதிர்க்கும் பட்சத்தில் நுகர்வோரை சங்கடப்படுத்துதல், சேவைக் கட்டணத்தை வேறு பெயரில் சேர்ப்பது ஆகியவை முக்கிய குறைகளில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 05.07.2022 முதல் 08.07.2022 வரை அதாவது, சிசிபிஏ வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்ட பிறகு, 85 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேவைக் கட்டண புகார்களின் முதல் 5 இடத்தில் டெல்லி, பெங்களூர், மும்பை, புனே மற்றும் காசியாபாத் ஆகியவை உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.