முதன்முதலில் தமிழில் அச்சடிக்கப்பட்ட பழைமையான பைபிள் – மீட்டு தரங்கம்பாடிக்கு கொண்டுவர கோரிக்கை!

சீகன்பால்கு தமிழில் அச்சடித்த பழைமையான பைபிள் தஞ்சை அருங்காட்சியகத்திலிருந்து காணாமல் போய், தற்போது லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனை  தரங்கம்பாடியிலுள்ள சீகன்பால்கு அருங்காட்சியகத்திற்கு  கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பைபிள்

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பாத்லோமேயு சீகன்பால்கு கி.பி.1706 -ம் ஆண்டு ஜூலை 9 -ம் தேதி தனது நண்பன் புளுட்சோன் என்பவருடன் கடல்மார்க்கமாக தரங்கம்பாடியை வந்தடைந்தார். அவர் வந்து நேற்றோடு (09.07.2022)  317 ஆண்டுகள் ஆகின்றன.

அப்போது தரங்கம்பாடியை டேனீஷ்காரர்கள் ஆட்சிசெய்து வந்தனர். அவர்களின் அனுமதியோடு கிறிஸ்துவ மதத்தை பரப்பியதுடன், தமிழ் மொழியில் ஆர்வம் கொண்டு அதனைக் முறைப்படி கற்றுத் தேர்ந்து தமிழுக்கும் தொண்டாற்ற தொடங்கினார். அதன் விளைவாக தமிழில் அச்சுக்கலையை கொண்டு வர முயற்சி எடுத்தார். ஜெர்மனியிலிருந்து அச்சு மிஷினை எடுத்து வந்து , தமிழ் எழுத்துகளை வடிவமைத்து 24.10.1712 -ல் தரங்கம்பாடியில் தமிழ் அச்சுக்கூடத்தை அமைத்தார். 1715 -ல் கிறிஸ்துவர்களின் புனித நூலின் ஒரு பகுதியான புதிய ஏற்பாட்டை தமிழில் அச்சிட்டு சாதனை படைத்தார்.

முதன்முறையாக தமிழ் எழுத்துகள் அச்சுக்கலை வடிவில்  கொண்டுவரப்பட்டது சீகன்பால்கு முயற்சியில்தான். அவர் தமிழில் அச்சடித்த புதிய ஏற்பாடு என்னும் பைபிள் தஞ்சாவூர்  அருங்காட்சியகத்தில் வைக்கபட்டிருந்தது. அந்த பைபிள் 2015-ம் ஆண்டு தஞ்சாவூர் அருங்காட்சியகத்திலிருந்து காணாமல் போய்விட்டது.

கோட்டை

இந்த நிலையில், தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தஞ்சையில் காணாமல்போன பைபிளை லண்டன்  அருங்காட்சியகத்தில் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி அந்த பைபிளை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

“பழைமையான, தமிழில் முதன்முதல் அச்சிடப்பட்ட  அந்தப்  பைபிளை தரங்கம்பாடியில் சீகன்பால்கு வாழ்ந்த வீட்டில் அமைக்கபட்டுள்ள அருங்காட்சியகத்திற்கு கொண்டு வர வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.