புதுடெல்லி: முன்னாள் முதல்வர் பழனிசாமி ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதுதொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ல் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை, தமிழக முதல்வராகப் பதவி வகித்த பழனிசாமி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக, ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் நான்கு வழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்த நிலையில், அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பணிக்கான ஒப்பந்தம், முதல்வரின் உறவினர் ராமலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் நான்கு வழிச் சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்த ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம் `வெங்கடாஜலபதி அண்ட் கோ’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், சேகர்ரெட்டி, நாகராஜன், பி.சுப்பிரமணியம் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மூலம், ரூ.200 கோடி மதிப்பில், மதுரை ரிங் ரோடு பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
வண்டலூர் – வாலாஜா சாலை வரையுள்ள 4 வழிச் சாலையை, 6 வழிச் சாலையாக மாற்ற ரூ.200 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம், `எஸ்பிகே அண்ட் கோ’ என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் நெடுஞ்சாலைத் துறைகோட்டங்களின் கீழ் வரும் சாலைகளில், கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் `வெங்கடாஜலபதி அண்ட் கோ’ நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சுமார் ரூ.4,800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள், பழனிசாமியின் உறவினர் பி.சுப்பிரமணியம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டு, பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன.
இதன்மூலம், முதல்வராகப் பதவி வகித்த பழனிசாமி, தனது கட்டுப்பாட்டில் இருந்த நெடுஞ்சாலைத் துறையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஆதாயம் அடைந்துள்ளார். பொது ஊழியர் என்ற முறையில், 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-ன் கீழ் உள்ள அனைத்து உட்பிரிவுகளின்படி அவர் தண்டனைக்கு உள்ளாகும் குற்றம் புரிந்துள்ளார்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த துறையும் அவரிடமே இருந்தது. எனவே, இது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கடந்த 2018 அக்டோபரில் அளித்த தீர்ப்பில்,‘‘முதல்வராகப் பதவி வகித்த பழனிசாமி மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க வேண்டியிருப்பதால், இந்த புகார் குறித்து சிபிஐ விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. சமீபத்தில் எஸ்பிகே நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.