லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் ஆஸ்திரேலியாவின் கியரியாசை தோற்கடித்தார்.
இங்கிலாந்தின் லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. சமீபத்தில் நுாற்றாண்டு விழா கொண்டாடிய ‘சென்டர் கோர்ட்’ அரங்கில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்-3’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 40வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் நிக் கியரியாஸ் மோதினர்.
முதல் செட்டை கியரியாஸ் 6-4 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஜோகோவிச், இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். தொடர்ந்து அசத்திய ஜோகோவிச், மூன்றாவது செட்டை 6-4 என தட்டிச் சென்றார். நான்காவது செட்டை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய கியரியாஸ், ‘டை பிரேக்கர்’ வரை சென்று 6-7 எனக் கோட்டைவிட்டார்.
மூன்று மணி நேரம் நீடித்த பைனலில் அசத்திய ஜோகோவிச் 4-6, 6-3, 6-4, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார். விம்பிள்டனில் 7வது முறையாக கோப்பை வென்ற இவருக்கு, 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது. விம்பிள்டன் பைனலில் வென்ற ஜோகோவிச், கோப்பையுடன் ரூ. 19 கோடி பரிசுத் தொகை பெற்றார். பைனல் வரை சென்று இரண்டாவது இடம் பிடித்த கியரியாசிற்கு, ரூ. 10 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement