விளையாட்டு வீரர்களுக்கான திருத்தப்பட்ட ரொக்க விருதுகள், ஓய்வூதியம்: அனுராக் தாக்கூர் அறிவிப்பு

புதுடெல்லி: விளையாட்டு வீரர்களுக்கான திருத்தப்பட்ட ரொக்க விருதுகள், ஓய்வூதியம், விளையாட்டுத் துறை இணையதளங்களை ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார். சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், அவர்களின் பயிற்சியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கும் திட்டம், விளையாட்டு வீரர்களுக்கான பண்டிட் தீனதயாள் உபாத்யாய் தேசிய நலன் போன்ற ரொக்க விருது திட்டங்களை விளையாட்டு வீரர்கள் மிகவும் எளிதில் அணுகுவதற்கு ஏற்றதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றும் நோக்கத்துடன் விளையாட்டுத் துறை திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட ரொக்க விருதுகள், ஓய்வூதியத்தை அறியவதற்கான விளையாட்டுத் துறையின் திட்டங்களுக்கான வலைதளம், தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி இணையதளம் ஆகியவற்றை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “இந்த விளையாட்டு துறைக்கான இணைய தளங்கள், மக்களுக்கு அதிகாரம் அளிப்பது, அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பது, குறைந்தபட்ச அரசு அதிகபட்ச ஆளுகை என்ற பிரதமரின் கண்ணோட்டத்தை முன்னெடுத்து செல்லும் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய மற்றொரு வளர்ச்சியாகும்,’’ என்று பாராட்டினார். மேலும், “இந்த திருத்தப்பட்ட திட்டங்கள், சாதனை நேரத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பலன்களை வழங்க அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வழங்கும். எந்தவொரு தனிப்பட்ட விளையாட்டு வீரரும் அவரவர் தகுதிக்கு ஏற்ப 3 திட்டங்களுக்கும் தற்போது நேரடியாக விண்ணப்பிக்கலாம்,’’ என்று அமைச்சர் விளக்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.