பா.ஜ.க தலைவரும், தெலங்கானவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான கே.லட்சுமணன், `ஸ்டாலின் போன்றவர்கள் சாதி, மத அடிப்படையிலான அரசியல் செய்கிறார்கள்’ என விமர்சனம் செய்துள்ளார்.
திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “ஆன்மிகத்தின் பெயரால் இன்றைக்கு அவர்கள் அரசியல் நடத்த முயற்சிக்கிறார்கள். ஆன்மிகத்தின் பெயரால் மனிதர்களைச் சாதியால், மதத்தால் பிளவு படுத்துபவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள்” என பா.ஜ.க-வை மறைமுகமாகச் சாடியிருந்தார்.

இந்த நிலையில் ஸ்டாலினின் இத்தகைய பேச்சுக்கு, பா.ஜ.க எம்.பி கே.லட்சுமணன் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் ஊடகத்திடம் பேசிய லட்சுமணன், “மதத்தின் பெயரால் பா.ஜ.க-மீது ஸ்டாலின் குற்றம்சாட்டுவது முற்றிலும் தவறு. இந்துத்துவாவை எப்போதும் எதிர்க்கும் ஸ்டாலின், மதம் என்பது மனிதனின் நம்பிக்கை என்பதையும், மோடி ஒருபோதும் மதத்தை அரசியலுடன் இணைக்கவில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். 2014-லிருந்து இதுவரை மோடி கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்களில், பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதா என்பதை ஸ்டாலின் சொல்ல வேண்டும்.

ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. அனைத்து மதத்தினருமே இந்த நலத்திட்டங்களின் பலனைப் பெறுகிறார்கள். மேலும், இதுபோன்ற திட்டங்கள் முஸ்லிம் சமூகத்தினருக்கு அதிகப்படியான பலனை அளிக்கிறது. ஸ்டாலின் போன்றவர்கள் இந்துத்துவாவுக்கு எதிராகப் பேசுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள், சாதி மற்றும் மத அடிப்படையிலான அரசியல் செய்கிறார்கள். பா.ஜ.க-வை விமர்சிப்பதே இவர்களின் வாடிக்கையாகி விட்டது” என்று சாடினார்.