மங்களூரு : துபாயிலிருந்து 189 பயணியருடன் புறப்பட்ட ‘ஸ்பைஸ் ஜெட்’ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மங்களூருக்கு பதிலாக கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு விமானியின் பணி நேரம் முடிந்து விட்டதாக கூறி, அவர் விமானத்தை இயக்க மறுத்து விட்டார்.
இதனால், மறுநாள் காலை ௧௦:௦௦ மணி வரை, 14 மணி நேரம் பயணியர் பரிதவித்தனர்.துபாயிலிருந்து ஜூலை 8ம் தேதி, ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவன விமானம், 189 பயணியருடன் மாலை 5:00 மணிக்கு மங்களூரு புறப்பட்டது. இரவு 8:00 மணியளவில் மங்களூரு விமான நிலையத்தில் இறங்க வேண்டும். அதற்கு முன் சில நிமிடங்களில், விமானத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்பதால், கோவைக்கு செல்வதாக, விமானி அறிவித்தார்.அதன்பின் கோவைக்கு சென்று எரிபொருள் நிரப்பியது.
ஆனால், மீண்டும் மங்களூரு வராமல், கொச்சி சென்று அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. காரணம் கேட்டபோது, ‘விமானியின் பணி நேரம் முடிந்து விட்டது; வேறு விமானி வந்த பின், மறுநாள் ஜூலை 9ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு விமானம் புறப்படும். அதுவரை ஓய்வெடுக்குமாறு, விமான பணிப்பெண்கள் கேட்டு கொண்டனர்.
இதனால், கேரளாவை சேர்ந்த பயணியர் சிலர், கொச்சியில் இறங்கி கொண்டனர்.மற்ற பயணியர் அங்கேயே இருந்தனர். அதிகாலை, 3:00 மணிக்கும் விமானம் புறப்படவில்லை. கேட்ட போது, காலையில் புறப்படும் என்றனர். காலை, 8:30 மணிக்கு விமானத்தில் பயணியர் ஏறி அமர்ந்தனர். அப்போது, மங்களூரு சர்வதேச விமான நிலையம் அனுமதி அளிககவில்லை என கூறினர்.காலை 10:00 மணி வரை விமானம் இயக்கப்படவில்லை.
ஒரு வழியாக புறப்பட்டு, காலை 10:50 மணிக்கு மங்களூரு சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இதனால், ௧௪ மணி நேரம் விமான பயணியர், எந்தவித வசதியுமின்றி தவித்தனர். பயணி ஒருவர் கூறுகையில், ‘மோசமான வானிலையால், மங்களூரில் தரையிறங்கவில்லை என கூறினர். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொச்சிக்கு சென்றிருக்கலாம். எங்களுக்கு எந்தவிதமான வசதியும் செய்து தரவில்லை. விமான நிலையத்திலேயே காத்திருக்க வைத்தனர். உணவு கூட நாங்களே வாங்கி கொண்டோம்’ என்றார்.ஏற்கனவே, ‘ஸ்பைஸ் ஜெட்’ விமான பயணியர் பல தொல்லைகளை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement