ஹைதராபாத்தில், தனது பண்ணை வீட்டில் வேலைபார்த்து வந்தவரின் மனைவியை, போலீஸ் அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணால் குற்றம்சாட்டப்பட்ட, மேற்கு மாரெட்பள்ளி காவல் நிலைய அதிகாரி கே.நாகேஷ்வர் ராவ்மீது, பாலியல் வன்கொடுமை, குற்றவியல் அத்துமீறல், கொலை முயற்சி, கடத்தல் மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்தால், நாகேஷ்வர் ராவை இடைநீக்கம் செய்திருக்கிறார். விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், நாகேஷ்வர் ராவ் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த வியாழனன்று நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில் நாகேஷ்வர் ராவ், தனது பண்ணை வீட்டில் செய்யும் ஊழியரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது திடீரென பண்ணை வீட்டுக்கு வந்த அந்த அந்தப் பெண்ணின் கணவர், நாகேஷ்வர் ராவைத் தாக்கி தன் மனைவியைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், நாகேஷ்வர் ராவ் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கணவன், மனைவி இருவரையும் ஹைதராபாத்தை விட்டு ஓடிவிடுமாறு மிரட்டியுள்ளார். அப்படிச் செய்யாவிட்டால், `பாலியல் வழக்கில் கைதுசெய்துவிடுவேன்’ எனவும் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து நாகேஷ்வர் ராவ், கணவன் மனைவி இருவரையுமே காரில் ஏற்றிக்கொண்டு ஆந்திராவில் உள்ள இப்ராஹிம்பட்டினம் நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கையில், வெள்ளிக்கிழமை அதிகாலைப் பொழுதில் கார் விபத்துக்குள்ளானது.
இதில் தப்பித்துக்கொண்ட கணவன் மனைவி இருவரும், போலீஸிடம் நாகேஷ்வர் ராவ் குறித்து புகாரளித்தனர். தலைமறைவாகியுள்ள போலீஸ் அதிகாரி நாகேஷ்வர் ராவைக் கைதுசெய்ய ராசகொண்டா போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி, அதுதொடர்பான தடயவியல் ஆதாரங்களை போலீஸார் சேகரித்துள்ளனர்.