மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் பந்தர்பூரில் உள்ள பாண்டுரங்க விட்டலர் கோயிலுக்கு 250 கி.மீ., தூரம் பாத யாத்திரையாக வந்த பக்தர்களுக்கு, நகரவாசிகள் வழியில் சமாஜ் செய்து சேவை செய்தனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூர் நகரில், பாண்டுரங்க விட்டலருக்கு கோயில் அமைந்துள்ளது. அவரின் பக்தர்கள், ஆண்டுக்கு ஒரு முறை, துளசி மணி மாலை அணிந்து, வைணவத்தை சேர்ந்த ஞானேஸ்வர் மற்றும் துக்கராம் சமாதிகள் உள்ள புனேயின் ஆளந்தி மற்றும் தேகு பகுதியில் இருந்து அவர்களது பாதுகைகளை தனித்தனி பல்லக்குகளில் வைத்து யாத்திரையாக செல்வார்கள். சுமார் 3 வாரங்கள் நடக்கும் இந்த யாத்திரை பக்தி பாடல்களை பாடியும், இசைக்கருவிகளை இசைத்தும் செல்வார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் காரணமாக இந்த யாத்திரை நடக்கவில்லை. இந்த ஆண்டு கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி யாத்திரை நடத்த மாநில அரசு அனுமதி வழங்கியது. இந்த ஆண்டிற்கான யாத்திரை ஜூன் 21ல் துவங்கியது. அஷாதி ஏகாதிசியான இன்று (ஜூலை 10) நிறைவு பெறுகிறது. இன்று அங்குள்ள ஆற்றில் புனிதநீராடி, பாண்டுரங்க விட்டலர் கோயிலில் தரிசனம் செய்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது. இவ்வாறு பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு வழியில் உள்ள நகர மக்கள் கால்களுக்கு மசாஜ் செய்து சேவை செய்தனர்.
பக்தர் ஒருவர் இது குறித்து கூறும் போது, நமது நாட்டின் ஆன்மிக பலமே இதுதான். எவ்வளவு காலம் ஆனாலும் நமது நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது. பக்தர்களுக்கு நாம் சேவை செய்ய வேண்டும் என்பதை புரிய வைக்கிறது. பக்தர்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவை. உலகில் உலகில் வேறு எங்குமே இதை பார்க்க முடியாது என்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது மனைவியுடன் பாண்டுரங்க விட்டலர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement