சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெறற 31-வது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 16 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மே 8 ஆம் தேதி, ஜூன் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் 31-வது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் இன்று (ஜூலை 9) நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31வது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் 1.45 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன்படி இன்று (10.7.2022) மாலை 7 மணி வரை தமிழகத்தில் 17 லட்சம் பேரு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் 3.44 லட்சம் பேர் முதல் தவணையும், 10.56 லட்சம் பேர் 2வது தவணையும், 3 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி கொண்டனர்.
இந்த முகாம் பணிகளை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார்.