34-ஆவது ஆண்டில் பா.ம.க: வெற்றியை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துவோம்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மடல்.!

பாட்டாளி மக்கள் கட்சி 34-ஆவது ஆண்டில் அடியெடுத்து வாய்க்கும் நிலையில், வெற்றியை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துவோம் என்று, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு. 

“என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே…!

தமிழ்நாட்டு அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், மக்களுக்கான உரிமைகளை வென்றெடுத்துக் கொடுப்பதை முழு நேரப் பணியாக கொண்டிருக்கும் கட்சியாகவும் திகழும் பா.ம.க., வரும் 16ஆம் தேதி 33 ஆண்டுகளை நிறைவு செய்து 34&ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்கத் தருணத்தில் பாட்டாளி சொந்தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளிகளைப் பொறுத்தவரை ஜூலை மாதம் கொண்டாட்டங்களின் மாதம். ஜூலை 16&ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள்; ஜூலை 20&ஆம் தேதி வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள்; ஜூலை 25&ஆம் தேதி பசுமைத்தாயகம் நாள்.  இன்னும் 6 நாட்களில் நமது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ள நிலையில், அது குறித்த மகிழ்ச்சிப் பெரு வெள்ளத்துடன் தான் இந்த மடலை எழுதுகிறேன்.

33 ஆண்டுகளுக்கு முன் பாட்டாளி மக்கள் கட்சி சென்னை கடற்கரை சீரணி அரங்கில் தொடங்கப்பட்ட காட்சிகள் எனது மனக்கண்களில் வந்து செல்கின்றன. சென்னை சைதாப்பேட்டையிலிருந்து கடற்கரை வரை நடைபெற்ற பேரணியிலும், பா.ம.க. தொடக்க விழாவிலும் பத்து லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் கலந்து கொண்டார்கள்.

‘‘ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்… சமூகநீதி நிச்சயம்…. சமத்துவமே  லட்சியம்’’ என்ற கொள்கை முழக்கத்துடன் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி இன்று வரை அந்த கொள்கையில் உறுதியுடன், லட்சியத்தை நோக்கி வீறுநடை போட்டுக் கொண்டிருப்பது நமக்கு பெருமை.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் முதன்மை நோக்கம் என்பது ஆட்சியைக் கைப்பற்றுவதும், அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தின் வழியாக மக்களுக்கு நன்மை செய்வதும் தான். பல கட்சிகள் ஆட்சிக்கு  வந்திருக்கலாம்; ஆனால், வரலாற்றில் நிலைக்கும் அளவுக்கு அவர்களின் கணக்கில் சாதனைகள் இல்லை. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவில்லை;

அதே நேரத்தில் அதன் கணக்கில் சாதனைகள் ஏராளமாக உள்ளன. கடந்த ஓராண்டில் எடுத்துக் கொண்டால், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வைத்தது, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான  நடவடிக்கைகளை உறுதி செய்திருப்பது, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தது, அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடப்படுவதை தடுத்து நிறுத்தியது, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதற்கு வழி வகுத்தது, வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வைத்தது என நமது சாதனை மகுடத்தில் வைரக்கற்கள் ஏராளம்.

ஆனாலும் ஆட்சியைக் கைப்பற்றும் இலக்கு மட்டும் நழுவிக் கொண்டே செல்கிறதே? என்ற கவலை மனதின் ஓரத்தில் என்னை உறுத்திக் கொண்டு தான் இருக்கிறது. அக்கவலையைத் தீர்க்கும் அருமருந்து உங்களிடம் தான் உள்ளது. உனது உழைப்பு தான் அந்த அருமருந்து. அதை நீயே நன்றாக அறிவாய்.

பாட்டாளி சொந்தங்களாகிய உங்களின் திறமைகளை ஒருமுகப்படுத்தி வெளிப்படுத்துவதற்கு பயிற்சி மிகவும் அவசியம். அதற்காகவே, கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவலால் செயல்படாத பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கம் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பயிற்சி பெற்ற பாட்டாளி சொந்தங்களிடம் தன்னம்பிக்கை பெருகியுள்ளது. ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஒற்றுமை மேலோங்குவதுடன் பக்குவமும், முதிர்ச்சியும் தெரிகிறது.

இவை அனைத்தும் பாட்டாளி மக்கள் கட்சியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் செல்வதற்கான கருவிகள் தான். இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி வெற்றிக் கனியை பறிப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. நீங்கள் நினைத்தால் நிச்சயமாக சாதிக்க முடியும். தமிழ்நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியை விடவும் துடிப்பான, பொறுப்பான அரசியல் கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்களைக் கொண்ட இயக்கமும் பாட்டாளி மக்கள் கட்சி தான்.  இதயம் இல்லாமல் உடலின் இயக்கம் இருக்க முடியாது என்பதைப் போலவே, நீங்கள் இல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியும் இல்லை. உங்களால் தான் பாட்டாளி மக்கள் கட்சி துடிப்பாக இயங்குகிறது.

பாட்டாளி மக்கள் கட்சி 34-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில் உங்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், ‘‘மக்களை சந்தியுங்கள், அவர்களின் தேவைகளை அறியுங்கள், அவர்களுக்காக போராடி கோரிக்கைகளை நிறைவேற்றித் தாருங்கள்’’ என்பதைத் தான். மக்களின் ஆதரவைப் பெறாமல் வெற்றி சாத்தியமல்ல. அதனால், இன்னும் 20 மாதங்களுக்குப் பிறகு தானே மக்களவைத் தேர்தல் வருகிறது என்ற அலட்சியம் வேண்டாம்.

இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்குங்கள். திண்ணைப் பிரச்சாரத்தின் மூலம் மக்களை அவர்கள் இடத்திற்கே சென்று சந்தியுங்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி, அவர்களின் ஆதரவை உறுதி செய்யுங்கள். அவ்வாறு செய்தால், 2024 மக்களவைத் தேர்தலில் நமது வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

2020, 2021-ஆம் ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டு விழாக்களை, கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக மிகப்பெரிய அளவில் கொண்டாட முடியவில்லை. நடப்பாண்டில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை; ஆனாலும், நாம் நமக்கான பொறுப்புணர்வுடன் ஆண்டு விழாவைக் கொண்டாட வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருக்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி தொடக்க விழாவுக்கான இந்த ஆண்டு ஆண்டு கொண்டாட்டங்கள் வழக்கமானவையாக இல்லாமல், இலக்கை எட்டுவதற்கான பயணத்தின் தொடக்கமாக அமையட்டும். பாட்டாளி மக்கள் கட்சி வளர்க… வெல்க!

இவ்வாறு அந்த கடிதத்தில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.