தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, 4800 கோடி ரூபாய் டெண்டர் முறை கேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதனை எதிரித்து எடப்பாடி கே பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில், “தமிழகத்தின் நெடுஞ்சாலைதுறை உள்ளிட்ட ஒப்பந்தங்களில் 4800 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், “முதலமைச்சர் மீதான இந்த புகார் குறித்து வெளிப்படை தன்மையுடன் விசாரணை செய்ய வேண்டி இருப்பதால், இந்த புகார் குறித்து சிபிஐ விசாரணை செய்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.