புதுடெல்லி,
இந்தியாவில் 5ஜி தொலைதொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.இந்த ஏலத்தில் பங்கேற்க அம்பானியின் ஜியோ நிறுவனம், ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன.
இதில் தற்போது அதானி குழுமமும் குதித்து உள்ளது.
இது குறித்து அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் அடுத்த தலைமுறை 5ஜி சேவைகளை தொடங்க தயாராகி வரும் நிலையில், அதற்கான ஏலத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.
விமான நிலையம், துறைமுகங்கள் மற்றும் தளவாடங்கள், மின் உற்பத்தி, பரிமாற்றம், வினியோகம் மற்றும் பல்வேறு உற்பத்தி செயல்பாடுகளில் மேம்பட்ட இணைய பாதுகாப்புடன் தனியார் இணைய சேவைகளை வழங்குவதற்காக 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களான அதானி, அம்பானி இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது.