புதுடெல்லி: 5ஜி செல்போன் சேவைக்கான அலைக்கற்றையை வாங்குவதற்கான ஏலத்தில், அம்பானிக்கு போட்டியாக கடைசி நேரத்தில் அதானி நிறுவனம் களமிறங்கி உள்ளது.இந்தியாவில் விரைவில் 5ஜி செல்போன் சேவை வழங்கப்பட உள்ளது. இதற்காக, ₹4.3 லட்சம் கோடி மதிப்புள்ள 5ஜி அலைக்கற்றை வரும் 26ம் தேதி ஏலம் விடப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்கும் தேதி நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்தது. ஏற்கனவே, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் மட்டுமே இந்த ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பித்து இருந்தன.இந்நிலையில், கடைசி நாளான நேற்று முன்தினம் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான நண்பராக கருதப்படும் கவுதம் அதானியின் அதானி நிறுவனமும் விண்ணப்பித்து இருப்பதாக நேற்று பரபரப்பான தகவல் வெளியானது. இதை அதானி நிறுவனம் உறுதிப்படுத்தாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை தனது நிறுவனம் ஏலத்தில் பங்கேற்பதை அதானி உறுதிப்படுத்தினார். இதன் மூலம், அம்பானி -அதானி இடையே செல்போன் சேவையில் தொழில் ரீதியாக நடக்கும் முதல் போட்டியாக இது உருவாகி இருக்கிறது. இவர்கள் இருவருமே பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இதனால், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி திடீரென பங்கேற்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள நிறுவனங்களின் விவரங்கள் நாளை மறுதினம் வெளியிடப்பட உள்ளன. ஏலத்தில் பங்கேற்பது ஏன்?‘விமான நிலையங்கள், துறைமுகங்கள், சரக்கு கையாளும் மையங்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள், மின்சாரம் எடுத்து செல்லுதல், விநியோகித்தல் மற்றும் பல்வேறு உற்பத்தி சார்ந்த நடவடிக்கைளின் தனியார் நலன் பாதுகாப்புக்காகவும், சைபர் தாக்குதல் போன்றவற்றை தடுக்கவும் 5ஜி அலைக்கற்றை வரிசை தேவைப்படுகிறது. இதற்காகவே, அதானி நிறுவனம் ஏலத்தில் பங்கேற்கிறது,’ என அதானி விளக்கம் அளித்துள்ளார்.