வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன் : பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில், 10 பேர் களமிறங்கியுள்ளனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆளும் பழமைவாத கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக, பிரதமர் போரிஸ் ஜான்சன் சில தினங்களுக்கு முன் பதவி விலகினார். இதையடுத்து, பிரதமர் பதவிக்கு போட்டியிட, முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான, ரிஷி சுனக் ஆதரவு திரட்டத் துவங்கியுள்ளார்.
போரிஸ் ஜான்சனைத் தொடர்ந்து பழமைவாத கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவரே, பிரதமராக முடியும். அதனால், பழமைவாத கட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான போட்டியில், முதலிடத்தில் உள்ள, ரிஷி சுனக் உட்பட, 10 பேர் களமிறங்கியுள்ளனர்.
”பிரதமராக தேர்வு செய்யப்பட்டால், மக்களிடம் கட்சி இழந்த நம்பிக்கையை மீட்பது, விலைவாசியை கட்டுப்படுத்துவது, நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதே என் நோக்கம்,” என, ரிஷி சுனக் கூறிஉள்ளார். ஆனால் வரி குறைப்பு குறித்து அவர் கூறவில்லை. எனினும் விரிவான வாக்குறுதிகளை அவர் விரைவில் வெளியிடுவார் என, தெரிகிறது. பிரதமர் போட்டியில் நேற்று வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் குதித்தார்.
ரிஷி சுனக்கிற்கு அடுத்து இவருக்கு, கட்சியில் ஆதரவு உள்ளது. முன்னாள் அமைச்சர்களான பாக்., வம்வசாளியைச் சேர்ந்த சஜித் ஜாவித், ஜெர்மி ஹன்ட், கிரான்ட் ஷாப்ஸ், அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிராவர்மன், ஈராக் வம்சாவளியான, நதிம் ஸாஹவி, நைஜீரிய வம்சாவளியான கெமி பெடநாச், டாம் டுகன்டட் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் விரைவில் தான் போட்டியிடப் போவதை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷி சுனக் தவிர்த்து, அனைவரும், தாங்கள் பிரதமரானால் வரிகளை குறைப்போம் என, தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement