ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காததால் 2 வயது தம்பியின் சடலத்தை மடியில் சுமந்த 8 வயது அண்ணன்; ம.பி-யில் மனதை காயப்படுத்திய காட்சி

போபால்: ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காததால் தனது 2 வயது தம்பியின் சடலத்தை 8 வயது அண்ணன் சுமந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் பலரது மனதையும் காயப்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் அம்பாவில் உள்ள பட்ஃப்ரா கிராமத்தில் வசிக்கும் புஜாராம் என்பவர், மொரீனா மாவட்ட மருத்துவமனையில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தனது இரண்டு வயது மகனை சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு வயது சிறுவன் உயிரிழந்தான். இறந்த உடலை 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல வாகனம் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் புஜாராம் கோரிக்கை விடுத்தார், ஆனால் அவர்கள் மருத்துவமனையில் வாகனம் இல்லை என்று மறுத்துவிட்டனர். பின்னர் மருத்துவமனை அருகே உள்ள தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரை அணுகினார். அவர்கள் ரூ.1500 கேட்டனர். இந்தத் தொகையை செலுத்தி மகனின் சடலத்தை கொண்டு செல்ல முடியாமல் புஜாராம் திணறினார். குறைந்த விலையில் வாகனம் ஏதேனும் கிடைக்குமா? என்று பார்ப்பதற்காக அருகில் உள்ள வாகன ஸ்டாண்டுக்கு புஜாராம் சென்றார். அந்த நேரத்தில் புஜாராமின் மூத்த மகனான எட்டு வயது சிறுவன், தனது தம்பியின் சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு சாலையோரம் அமர்ந்திருந்தான். இந்த காட்சியை உள்ளூர் பத்திரிகையாளர் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு இருந்தார். இந்தப் படம் வைரலானது. தகவலறிந்த அதிகாரிகள், புஜாராமுக்கு வாகனம் ஏற்பாடு செய்து ெகாடுத்தனர். வாகனம் கிடைக்காததால், தனது இரண்டு வயது தம்பியின் சடலத்தை எட்டு வயது அண்ணன் மடியில் வைத்திருந்த காட்சி பலரது மனதையும் காயப்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.