சென்னை அருகே உள்ள வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை தேர்வு செய்வது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொழுக்குழு கூட்டங்கள் நடைபெற்றன. காலை 9 மணி அளவில் முதலில் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது. அந்த கூட்டத்தில் 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டதோடு, அவற்றை நிறைவேற்றி தருமாறு பொதுக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதனை அடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுப்பது என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பொதுக்குழு முழு மனதாக அங்கீகரித்தது.
பொதுக்குழு உறுப்பினர்களின் ஒட்டு மொத்த ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் நந்தம் விசுவநாதன் பேசிய போது பொதுக்குழு உறுப்பினர்கள் எழுந்து நின்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென முழக்கமிட்டனர்.
இதையடுத்து பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களை நீக்குவது குறித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து அறிவிப்பார் என்றார்.
இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் பொதுக்குழு கூட்டத்திலேயே சிறப்பு தீர்மானமாக ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோரை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.