சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூலை 11) காலை 9.15 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நத்தம் விஸ்வநாதன் முன்மொழிய ஜெயக்குமார் வழிமொழிய பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானங்களை வாசித்தார். அதன்படி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்து அறிவித்தார். மேலும், 4 மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக நிரந்தர பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பு, இனி துணை பொதுச்செயலாளர் என மாற்றம் செய்யப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இடைக்கால பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் அளிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், தந்தை பெரியார், அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ‘பாரத ரத்னா’ விருதை, மத்திய அரசு வழங்ககோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர் 5 ஆண்டுகள் தலைமை கழக நிர்வாகியாக பதவி வகித்திருக்க வேண்டும் என்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“