தஞ்சை-திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தஞ்சை வந்தார். தஞ்சையில் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இன்று காலை போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ‘மாற்றத்திற்கான மாரத்தான்-2022’ போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வைத்தார்.
பின்னர் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. 98.6 சதவீதத்தினர் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் திருச்சியில் 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கிய சிறப்பு முகாமில் இதுவரை 3 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த பணியானது இன்று மாலை 7 மணி வரை நடைபெறும். அதைத்தொடர்ந்து தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு பணியில் ஈடுபட இருக்கிறோம். பக்ரீத் பண்டிகை என்பதால் இஸ்லாமியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் மட்டும் 3640 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுவதாகவும் 18 வயதுக்கு மேல் 96.48 சதவீதம் பேர் முதல் தவணையும், 85.47 சதவீதம் இரண்டாவது தவணையும், திருச்சியில் 95 சதவீதம் முதல் தவணையும், 84 சதவீதம் 2-வது தவனையும், 12 வயது முதல் 14 வயது வரை 98 சதவீதம் முதல் தவனையும், 66 சதவீதம் இரண்டாவது தவணையும், 15 முதல் 17 வயது வரை திருச்சியில் 96 சதவீதம் முதல் தவனையும், 66 சதவீதம் இரண்டாவது தவணையும் கொரொனா தடுப்பூச்சியை செலுத்தி உள்ளனர்.
மேலும், தமிழகத்தில் 1 கோடியே 30 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி போடாதவர்களை தேடி கண்டுபிடித்து போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் முதலில் தொய்வு ஏற்பட்டது. இதற்காக தற்போது மறுபடியும் அதிக விழிப்புணர்வு செய்து வருகிறோம்.
பொருளாதாரம் முடங்காமல் இருக்க தொழிலாளர்களுக்கு நிறுவன முதலாளிகள் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த வழிவகை செய்து கொள்ளுங்கள். இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் எனும் திட்டத்தை கொண்டு வருவோம்.
நீட் தேர்வு குறித்து விரைவில் நல்ல தகவல் அறிவிக்கப்படும். நாமக்கல் சித்த மருத்துவ கல்லூரி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகங்கள் சென்னையில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மருத்துவமனைகள் சரி செய்யப்படும்.
பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு ரூபாய் 225 கட்டணம் நிர்ணயித்துள்ளது என்றும், மருத்துவமனைகளில் சர்வீஸ் சார்ஜ் 150 உட்பட மொத்தம் 375 ரூபாய் வசூல் செய்வதாகவும் இது சம்பந்தமாக சிறுகுறு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், ஹோட்டல் உரிமையாளர் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் ஊழியர்களுக்கு உரிய பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கு தங்களது நிர்வாகம் சார்பில் அதற்குரிய பணத்தை செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம்.
மேலும், தனியார் மருத்துவமனையிலான அப்பல்லோ, காவேரி மருத்துவமனை தமிழக முழுவதும் உள்ள கிளைகளில் பூஸ்டர் தடுப்பூசிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 225 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்தினால் போதும் என்றும் சர்வீஸ் கட்டணம் தேவை இல்லை.
மருத்துவ படிப்பான இளநிலை மற்றும் முதல்நிலை படிப்புகளுக்கான சட்டம் 254 மற்றும் 393 இணைத்தது மருந்துவ படிப்பு பாதிக்கும் என்று கேட்டதற்கு இது சம்பந்தமாக இரண்டு சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை 10 தடவைக்கு மேல் நடந்துள்ளதாகவும் தற்பொழுது 95 சதவீதம் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாகவும் இருவர்களின் கல்விகளும் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வு குறித்து கேட்டதற்கு தமிழகத்தில் தான் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் அதிகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். மேலும், சட்டப்படியான நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக கூறியதோடு மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திரா பிரதான் யாதவ் நீட் தேர்வில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் கூறியுள்ளார்.
திருச்சியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமா என்று கேட்டதற்கு நாமக்கல்லில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும், சென்னையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும். இங்கு சித்த மருத்துவமனை மட்டுமே முதலில் நடத்தப்படும்.
திருவெறும்பூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் மையம் செயல்படாததால், பொதுமக்கள் தனியார் மையங்களை நாடி செல்வது குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் 701 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளதாகவும் அங்கு ஸ்கேன் பெசிலிட்டி இல்லை. இங்கு எந்த மருத்துவமனையில் பிரச்சனை உள்ளது என்பதை தெரிவியுங்கள். மாநகராட்சி நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க சொல்வதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“