கரூர்: தமிழக மக்கள்தொகை 50 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மிக மெதுவாக அதிகரித்து வந்த உலக மக்கள்தொகை, அதன்பின் வெகுவேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.
1987 ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது. அந்நாளே உலக மக்கள்தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று (ஜூலை 11) 36-வது உலக மக்கள்தொகை தினமாகும்.
நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு, 1881-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டு நடைபெற வேண்டிய நிலையில், கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 20 கோடியாக இருந்த நாட்டின் மக்கள்தொகை நூறாண்டுகளில் 100 கோடியாகவும், 165 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை 600 கோடியாகவும் அதிகரித்தது. 2011-ல் உலக மக்கள்தொகை 700 கோடியாக அதிகரித்து, தற்போது 800 கோடியை நெருங்கி வருகிறது.
மக்கள்தொகை அதிகரித்து வந்தாலும் மக்கள் பெருக்கம் (பிறப்பு வீதம்) கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை பெருக்கம் 2016-ல் 1.14 சதவீதம், 2017-ல் 1.12 சதவீதம், 2018-ல் 1.09 சதவீதமாக இருந்தது. இது 2023-ம் ஆண்டில் 1 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல, தமிழக மக்கள்தொகை 1901-ல் 1.92 கோடியாக இருந்தது. தொடர்ந்து, 1951-ல் 3.01 கோடி, 1961-ல் 3.3 கோடி, 1960 முதல் 1970 வரையிலான காலக்கட்டத்தில் 22.3 சதவீதம் அதிகரித்து, 1971-ல் 4.11 கோடியாக இருந்தது. அதன்பின், தீவிர குடும்ப கட்டுப்பாடு திட்டங்களால் மக்கள்தொகை பெருக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதால், 1981-ல் 4.8 கோடியானது.
தொடர்ந்து, 1991-ல் 5.5 கோடி, 2001-ல் 6.24 கோடி, 2011-ல் 7.24 கோடியாக இருந்த தமிழக மக்கள்தொகை தற்போது 8 கோடியை கடந்திருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் தமிழக மக்கள்தொகை இருமடங்காக அதிகரித்துள்ளது.
மக்கள்தொகை பெருக்கத்தை குறைக்க அரசு புதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.