இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: தமிழக தொழிலதிபர் கடத்தல்: 5 பேர் கைது| Dinamalar

இந்திய நிகழ்வுகள்

தமிழக தொழிலதிபரை கடத்திய ஐந்து பேர் டில்லியில் கைது

டில்லியில் கடத்தப்பட்ட தமிழக தொழிலதிபர் உள்ளிட்ட இருவரை, ஹரியானா, டில்லி போலீசார் இணைந்து பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜவுளி நிறுவன அதிபர், கே.எஸ்.வில்வபதி. இவரை, ஜிர்வானி பாபு என்பவர், ‘வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்ய ஜவுளி தேவை’ எனக்கூறி டில்லிக்கு வரவழைத்துள்ளார். வில்வபதி, மேலாளர் வினோத்குமாருடன் டில்லிக்கு சென்று உள்ளார். இருவரையும் ஒரு பங்களாவிற்கு அழைத்துச்சென்ற ஜிர்வானி பாபு, அவர்களை கட்டிப் போட்டு, 40 லட்சம் ரூபாய் தந்தால் விடுவிப்பதாக மிரட்டியுள்ளார். மேலும், 10 லட்சம் ரூபாய் தந்தால், அவர்களை கொலை செய்ய உத்தரவிட்ட நபரின் விபரத்தை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் பீதியடைந்த, வில்வபதி தன் குடும்பத்தினருடன் பேசி பணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அத்துடன், டில்லியில் உள்ள தன் நண்பருக்கு போன் செய்து பண உதவி கோரியுள்ளார். அப்போது பதற்றமாக ஒலித்த அவரது குரல், நண்பருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே, வில்வபதி குடும்பத்தை தொடர்பு கொண்ட போதுதான், அவர் கடத்தப்பட்டது தெரியவந்தது. அடுத்து நடந்தது குறித்து ஹரியானா சிறப்பு அதிரடிப் படை ஐ.ஜி., சதீஷ் பாலன் கூறியதாவது: வில்வபதி, வினோத் குமார் கடத்தப்பட்டது குறித்து தமிழக உயரதிகாரிகளிடம் இருந்து எங்களுக்கு தகவல் வந்தது. உடனே நாங்கள், டில்லி சிறப்பு போலீஸ் படையுடன் இணைந்து கடத்தல்காரர்களை தேடினோம்.

பல முயற்சிகளுக்குப் பின், அவர்கள் புது டில்லியின் பி.எஸ்., திலக் நகரில் இருப்பது தெரிய வந்தது.உடனே அந்த பங்களாவை அதிரடியாக சுற்றி வளைத்து வில்வபதி, வினோத் குமார் ஆகியோரை மீட்டோம். அவர்களை கடத்திய, ஜிர்வானி பாபு, ஆசிப் உசேன், முகமது ஆசாத், முகமது கரீம், சோனு ஆகியோரை கைது செய்தோம். இந்த கடத்தல் தொடர்பாக திண்டுக்கல் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதனால், ஐந்து பேரும் தமிழகத்திற்கு கொண்டு செல்லப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

உயிர் தப்பியது குறித்து வில்வபதி கூறியதாவது:இந்த மாதிரி சிக்குவேன் என கனவிலும் நினைக்கவில்லை. உயிர் தப்புவோம் என்ற நம்பிக்கையை இழந்து விட்டேன். இனி வியாபாரத்தில் அனைத்து விபரங்களையும் பல தரப்பில் உறுதி செய்ய வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டேன். எங்களை மீட்ட ஹரியானா, டில்லி போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.விவ்பதி, விவேக் பத்திரமாக மீட்கப்பட்டது அவர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தொழிலதிபருக்கு 4 மாதம் சிறை

புதுடில்லி-நீதிமன்ற உத்தரவை மீறியதாக, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது தொடரப்பட்ட வழக்கில் நான்கு மாத சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல வங்கிகளில், 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக, ‘கிங்பிஷர்’ நிறுவனத்தின் தலைவரான தொழிலதிபர் விஜய் மல்லையா மீது வழக்குகள் தொடரப்பட்டன.இதற்கிடையே, 2016 மார்ச் மாதம் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு அவர் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி அழைத்து வருவதற்கான வழக்குகள் அங்கு நடந்து வருகின்றன.

கடனை மீட்பதற்காக வங்கிகள் தொடர்ந்த வழக்கில், தன் சொத்துக்களை விஜய் மல்லையா முழுமையாக தெரிவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.வழக்குகள் முடியும் வரை தன் சொத்துக்கள் மீது எந்த பரிவர்த்தனையும் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம், 2017ல் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி, அவர் தன் குடும்பத்தாருக்கு பல சொத்துக்கள் மற்றும் பணத்தை மாற்றினார். இதையடுத்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையே, பரிவர்த்தனைகள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மல்லையா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:விஜய் மல்லையா தன் செயலுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. மேலும் வழக்கை இழுத்தடிப்பு செய்வதற்கான முயற்சிகளிலேயே அவர் ஈடுபட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு, நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்குள் அவர் அதை செலுத்தாவிட்டால், மேலும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, தன் குடும்பத்தாருக்கு மாற்றிய, 317 கோடி ரூபாயை வட்டியுடன், நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், அதை மீட்பதற்கான நடவடிக்கைகளில் வங்கியின் கடன் மீட்பு அதிகாரிகள் ஈடுபடலாம். இதற்கு மத்திய அரசும், அதன் அமைப்புகளும் உதவிட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

‘லீவ்’ தராததால் மன அழுத்தம்ஆயுதப்படை வீரர் தற்கொலை

ஜோத்பூர்-விடுமுறை தராததால் மன அழுத்தத்துக்கு ஆளான மத்திய ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.ராஜஸ்தான் மாநிலத்தின் பல்டிகின்சியான் என்ற இடத்தில் மத்திய ஆயுதப்படை போலீசின் பயிற்சி மையம் உள்ளது.

இங்கு, நரேஷ் ஜாட் என்பவர் ஜவானாக இருந்தார். இவர் அதே வளாகத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம், அவர் தன் அதிகாரியிடம் விடுமுறை கேட்டார். அவர் மறுத்து விட்டார். இதனால் கடும் மன அழுத்தத்துக்கு ஆளான நரேஷ், நான்காவது மாடியில் உள்ள தன் வீட்டின் பால்கனியில் இருந்து, தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரது தந்தை மற்றும் ஆயுதப்படை அதிகாரிகள் வந்து சமானதானம் செய்தனர். ஆனால், அதை ஏற்காத நரேஷ் நேற்று காலை தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

மத உணர்வை புண்படுத்தியவர் கைது

ஜம்மு-ஜம்மு – காஷ்மீரில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பசுவை கொல்லும் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.ஜம்மு – காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தின் ஹஸ்யோட் கிராமத்தைச் சேர்ந்தவர் இம்ரான் மிர். இவர் பக்ரீத் பண்டிகை நாளான நேற்று முன் தினம் பசுவை வெட்டுவது போல படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதற்கு ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, இம்ரான் மிர்ரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழக நிகழ்வுகள்

வழிப்பறி 3 பேர் கைது

உடுமலை:உடுமலை அருகேயுள்ள, துங்காவியிலுள்ள தனியார் மில்லில், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த, ராஜ்தோஸ், 30, மற்றும் அவருடன் பணியாற்றும் சுஜித்பர்மன், சங்கர் மண்டல் ஆகியோருடன், மளிகை பொருட்கள் வாங்குவதற்காக, மடத்துக்குளம் – துங்காவி ரோட்டில், மலையாண்டிபட்டணம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது, பைக்கில் வந்த, 3 பேர் அவர்களை தாக்கி, 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச்சென்றனர்.இது குறித்து கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மதுரையைச்சேர்ந்த, அசோக்குமார், 21, கொமரலிங்கத்தைச்சேர்ந்த, பாலமுருகன், 27, நீலம்பூரைச்சேர்ந்த, மனோகரன், 23, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: முன்னாள் காதலன் வெறிச்செயல்

கோவை:கோவையில் காதலை முறித்துக்கொண்ட இளம்பெண்ணை தேடிச்சென்று, கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.சேலம் கொண்டாலாம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ், 26; போட்டோகிராபர். இவருக்கும், கோவையை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும், சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பட்டப்படிப்பு படித்த அந்த பெண், கார் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார்.இருவரும் இரண்டரை ஆண்டுகளாக தொடர்பில் இருந்தனர். இந்த பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல தினேஷ் செயல்பாடுகள் மீது அந்த பெண்ணுக்கு அதிருப்தி ஏற்பட்டது. தினேஷ் போன் நம்பரை, ‘பிளாக்’ செய்து விட்டார்.ஆத்திரத்தில் இருந்த தினேஷ், நேற்று தன் காதலியை தேடி வந்தார். கார் ஷோரூம் அருகே வந்தவுடன், காதலியை கண்டுபிடித்து பேச்சுக் கொடுத்தார்.ஆனால், தான் பேச விரும்பவில்லை என்று அந்த பெண் உறுதியாக கூறினார். இதைக்கேட்டதும், மறைத்து வைத்திருந்த கத்தியால், இளம்பெண்ணை தினேஷ் சரமாரியாக குத்தினார்.முதுகிலும், கன்னத்திலும் கத்திக்குத்து பட்ட அந்த பெண் அலறித்துடித்தார். அருகே இருந்தவர்கள், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கத்தியுடன் நின்றிருந்த வாலிபரை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரித்த ரேஸ்கோர்ஸ் போலீசார், தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம்பெண்ணுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

latest tamil news

டாஸ்மாக் கடையில் கத்திக்குத்து:ஒருவர் கைது

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கத்தி குத்து விழுந்தது.துடியலுார் அருகே சுப்பிரமணியம் பாளையத்தில் வசிப்பவர் பரத் குமார், 22; வெல்டிங் தொழிலாளி. இவரது நண்பர் ரமேஷ் உடன் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் அமர்ந்து, மது அருந்தி கொண்டிருந்த ரவிக்குமாருக்கும், பரத்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார், தன்னிடம் இருந்த கத்தியால் பரத் குமாரின் நெஞ்சில் குத்தினார். காயம் அடைந்த அவரை , துடியலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

மண்டபம் அருகே பஸ் வேன் மோதல்: 4 மீனவர்கள் பலி

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே சுற்றுலா பயணிகள், மீனவர்கள் சென்ற பஸ், வேன் மோதிய விபத்தில் மண்டபத்தை சேர்ந்த முகைதீன் அப்துல்காதர் 40, ரஷப் அலி 39, அன்சர் அலி 38, சேது 40, ஆகியோர் பலியாகினர்.

இருபது பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல் அட்டையை பிடிப்பதற்கான தடையை நீக்க வலியுறுத்தியும், பிடிக்க அனுமதிக்க வேண்டியும் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கலெக்டரிடம் மனு அளித்தபின் போராட்டத்தில் பங்கேற்ற 15 பேர் ஒரு வேனில் மண்டபம் பகுதிக்கு திரும்பினர். அகதிகள் முகாம் அருகே ஈரோடு மாவட்டம் பிரம்மதேசம் புதுார் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒரு வேனில் ராமேஸ்வரத்தில் இருந்து வந்தனர். இரண்டு வேன்களும் மோதி, மீனவர்கள் வேன் நொறுங்கி கவிழ்ந்ததில் 9 பேர் காயம் அடைந்தனர். ஈரோடு வேனில் 15 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தோரை உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பாம்பன் மீனவர்கள் முகைதீன் அப்துல்காதர் 40, ரஷப் அலி 39, ஆகியோர் இறந்தனர். அடுத்து அன்சர் அலி 38, சேது 40, ஆகியோரை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு அவர்கள் இருவரும் பலியாகினர்.மணிகண்டன் என்பவர் ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் காயமடைந்த 20 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

எம்.எல்.ஏ.,வுக்கு எதிர்ப்பு

கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் ராமநாதபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மருத்துவமனைக்கு வந்தார். அவரை வழிமறித்த மீனவர்கள், ‘கடல் அட்டை பிடிக்க அனுமதி கேட்டு பலமுறை மனு கொடுத்தும் ஏமாற்றிவிட்டீர்கள். உங்களால் தான் எங்களுக்கு இந்த நிலை. ஓட்டுப் போட்ட எங்களை ஏமாற்றிவிட்டீர்கள்’ என பேசினர். வேறு வழியின்றி எம்.எல்.ஏ., அங்கிருந்து திரும்பிச் சென்றார். பலியான மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டும், கடல் அட்டை பிடிக்க அனுமதிக்க வலியுறுத்தியும் மருத்துவமனை முன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.—-

மீனவர்கள் எதிர்ப்பு

மண்டபம் அகதிகள் முகாம் அருகே விபத்தில் பலியானோர் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களும் அங்கு சிகிச்சையில் உள்ளனர்.இவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற தி.மு.க., எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில் அவர் திரும்பிச் சென்றார். இரவு 7:30 மணிக்கு ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, ஆறுதல் கூற மருத்துவமனைக்கு சென்றார். அவரை கண்டித்தும் மீனவர்கள் கோஷம் எழுப்பினர். ஆக்ரோஷமாக பேசியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எம்.பி.,யும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

பாட்டி பேரன் கொலை

தென்காசி- -செங்கோட்டை அருகே சொத்து பிரச்னையில் காசிர் அலி 25, அவரது பாட்டி சைதுன் பீவி 70, வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, அடவிநயினார் அணைக்கட்டு அருகே மேக்கரையை சேர்ந்தவர் காசிர் அலி. மனைவி அசன்பீவி நேற்று முன்தினம் தென்காசியில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று பகல் 11:00 மணிக்கு அசன்பீவி, மேக்கரை வீட்டுக்கு வந்தபோது கணவர் காசிர் அலி வீட்டுக்குள் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். காசிர் அலியின் பாட்டி சைதுன் பீவி தொழுவத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். எஸ்.பி., சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். சொத்து பிரச்னையில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

7 வயது மகள் பலாத்காரம்: காமுக தந்தைக்கு 20 ஆண்டு சிறை

கடலுார்-சிதம்பரம் அருகே, 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 36 வயது லாரி டிரைவர், கடந்தாண்டு ஏப்., 2ம் தேதி, குடிபோதையில் மனைவியிடம் பைக் கேட்டு தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தார். அச்சமடைந்த மனைவி, மகன் மற்றும் தாயுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். வீட்டில் தனியாக துாங்கிக் கொண்டிருந்த, இரண்டாம் வகுப்பு படித்த தன், 7 வயது மகளை லாரி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்தார். புகாரின் அடிப்படையில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார், ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப் பதிந்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை, கடலுார் போக்சோ கோர்ட்டில் நடந்தது. நீதிபதி எழிலரசி, மகளை பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்புஅளித்தார்.அபராதம் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.

மகள் என்றும் பாராமல், தந்தையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளதால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். அவரது எதிர்காலத்திற்காக, 5 லட்சம் ரூபாயை, அரசு நிதியில் இருந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பெற்றுத் தரவும் நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.