கொழும்பு,
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரம சிங்கே ஆகியோர் அதிகாரபூர்வமாக பதவி விலகியதும் அனைத்துக்கட்சி அரசு அமைய உள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் ஆலோசனைகள் நடத்தி வருகின்றன.
நேற்று முக்கிய எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி., அதன் கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தின. அதில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவுப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன், அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸ் ரிஷாத பாதியுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இன்றும் அவர்கள் தங்கள் ஆலோசனையை தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேர்த்தனே தலைமையில் அனைத்துக்கட்சி அரசு பற்றிய ஒரு ஆலோசனை கூட்டம் இன்று நடக்க உள்ளதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது. வரும் புதன்கிழமைக்கு பிறகு அங்கு புதிய அரசு பதவி ஏற்கும் என தெரிய வந்துள்ளது.