இலங்கையில் போராட்டம் நீடிப்பு: பதுங்கு குழி வழியாக கோத்தபய தப்பினாரா? பரபரப்பு தகவல்கள்

கொழும்பு,

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் அரசியல் நெருக்கடிக்கும் வழிவகுத்து உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

போராட்டம் உச்சம்

விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு போர் வெற்றிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என கொண்டாடிய இலங்கை சிங்கள மக்கள், இப்போது நாட்டின் நிலவுகிற வாழ்வாதார நெருக்கடிக்கு அதே ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என கூறி போர்க்கொடி உயர்த்தி இருப்பது வரலாற்று திருப்பமாக மாறி இருக்கிறது.

பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினாலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் ஒட்டிக்கொண்டிருந்தது, அவரது குடும்பத்தை நெருப்பாற்றில் தள்ளி விடும், மக்கள் போராட்டம் உச்சம் தொடும் என்று அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அதிபர் மாளிகை சூறை

கொழும்பு நகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகை முன் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கானோர் அணி, அணியாக திரண்டதும், கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆவேசத்துடன் முழங்கியதும், தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்து வசப்படுத்தி ஆர்ப்பரித்ததும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அதிபர் மாளிகைக்குள் மக்கள் நுழைந்தபோது ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலிலும், ராணுவத்தினரின் தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு ஆகியவற்றிலும் 102 பேர் படுகாயம் அடைந்து கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ராஜினாமா செய்யாவிட்டால்…

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தலைமையில் அவசரமாக கூடிய அனைத்துக்கட்சி கூட்டம், அதிபர் கோத்தபய ராஜபக்சேயும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயும் பதவி விலக வேண்டும், அனைத்துக்கட்சி அரசு பதவி ஏற்க வேண்டும் என்று முடிவு எடுத்தது. அதைத் தொடர்ந்து, பிரதமர் பதவி ஏற்று 2 மாதங்கள் கூட முழுமை அடையாத நிலையில் ரணில் விக்ரம சிங்கே பதவி விலகுகிறார். அவரைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேயும் நாளை மறுதினம் (13-ந் தேதி) ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இதை அதிபருடன் தொடர்பில் உள்ள சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார்.

அதிபர் பதவியை கோத்தபய புதன்கிழமை ராஜினாமா செய்யாவிட்டால் நாடு தழுவிய முழு கடையடைப்பில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் நேற்று கூட்டாக நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளன.

ரணில் மாளிகைக்குதீ வைத்தவர்கள் கைது

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் மாளிகைக்கு போராட்டக்காரர்களில் சிலர் தீ வைத்ததில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதைக் காட்டும் வீடியோ பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டது. அந்த வீடியோ பதிவு, ரணில் விக்ரம சிங்கேயின் மாளிகை எரிந்த காட்சிகளையும், சேதம் அடைந்த செடான் கார், ஓவியங்கள், கலைப்படைப்புகள் மாளிகை மற்றும் அதன் வளாகத்தில் சிதறிக்கிடந்ததையும் காட்டின.

பிரதமர் ரணில் விக்ரம சிங்கே மாளிகைக்கு தீ வைத்த சம்பவத்தில் 3 இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் மேலும் பலர் கைதாவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரதமர் மாளிகை தீ வைக்கப்பட்டிருந்தபோது அந்த பகுதியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், அதுபற்றி விசாரணை நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கட்டு கட்டாக பணம்

இந்த நிலையில், இலங்கை மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கு அல்லாடுகின்ற சூழ்நிலையில், அதிபர் மாளிகையின் ரகசிய அறையில் கட்டு, கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போராட்டக்காரர்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த பணத்தை அவர்கள் கைப்பற்றினர்.

மொத்தம் ரூ.1 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் சிக்கியதாகவும், அந்த பணத்தை உள்ளூர் போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்து விட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

‘வெளியேறப்போவதில்லை’

நேற்று 2-வது நாளாக அதிபர் மாளிகைக்கு மக்கள் அலை, அலையாக வந்து, ஆர்ப்பரித்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாதவரையில், அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறப்போவதில்லை என்பதில் போராடும் மக்கள் உறுதியுடன் உள்ளனர்.

இதுபற்றி மாணவர் தலைவர் லகிரு வீரசேகர கூறும்போது, “எங்கள் போராட்டம் ஓய்ந்து விடவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகிச்செல்கிறவரையில் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம்” என தெரிவித்தார்.

பொதுமக்கள் போராட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மந்திரிகள் ராஜினாமா

இதற்கிடையே இலங்கையின் முதலீட்டுத்துறை மந்திரி தம்மிகா பெரைரா நேற்று பதவியை ராஜினாமா செய்தார். பதவி ஏற்ற ஒரு மாதத்திற்குள் அவர் பதவி விலகி உள்ளார். இதேபோன்றுஇந்தியா அனுப்பிய யூரியா உரத்தை ஏற்றுக்கொண்ட சிறிது நேரத்தில் விவசாய மந்திரி மகிந்த அமரவீரா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஏற்கனவே ஹரின் பெர்னாண்டோ, மனுச நாணயக்காரா, பந்துல குணவர்த்தனே ஆகிய 3 மந்திரிகள் நேற்று முன்தினம் பதவி விலகினர்.

ராணுவம் வேண்டுகோள்

இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சியால் தொடர்ந்து அமைதியற்ற சூழல் தொடர்கிறது. இந்த நிலையில், நாட்டில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ராணுவம் நேற்று கேட்டுக்கொண்டுள்ளது.

இதையொட்டி ராணுவ தளபதி சவேந்திர சில்வா வெளியிட்ட அறிக்கையில், “தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் உருவாகி உள்ளது. நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து இலங்கை மக்களும் ஆயுதப்படைகள் மற்றும் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பதுங்கு குழி வழியாக தப்பினாரா?

இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே எங்கே ஓட்டம் பிடித்தார் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. அவர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தனி விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பியதாக ஒரு தகவல் வெளியானது. மற்றொரு தகவல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர் கப்பல்களில் கடற்படை பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்தது.

ஆனால் இப்போது அதிபர் மாளிகையில் ஒரு பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியான கதவுடன், பூமிக்கு அடியில் ‘லிப்ட்’ மூலம் சென்றடைகிற வகையில் இந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பதுங்கு குழியை அதிபர் மாளிகை சிறப்பு பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர்.

எனவே இந்த பதுங்கு குழியின் வழியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பினாரா என்ற புதிய கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்கா அறிவுரை

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு விரைந்து நீண்ட கால தீர்வுகளை விரைவாக காணுமாறு இலங்கை அரசியல் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று கூறுகையில், “நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு அர்ப்பணிப்புடன் இதை அணுகுமாறு இலங்கை நாடாளுமன்றத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். தற்போதைய அரசோ அல்லது அரசியல் சாசனப்படி புதிதாக தேர்வு செய்யப்படுகிற அரசோ நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்பை மீண்டும் கொண்டு வரும் தீர்வுகளை கண்டறிந்து, விரைவாக செயல்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.