இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்திருப்பதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே கப்பல் மூலம் நாட்டைவிட்டு தப்பியோடி விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உக்கிரத்தில் மக்கள், காலியாகும் தலைமை என இலங்கையின் அரசியல் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக இருப்பதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த மேற்கு வங்க எம்.எல்.ஏ ஒருவர், இலங்கையின் தற்போதைய நிலையை இந்தியாவுடன் ஒப்பிட்டு, பிரதமர் மோடியை விமர்சித்திருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் இது தொடர்பாகப் பேசிய திரிணாமுல் எம்.எல்.ஏ இட்ரிஸ் அலி, “இலங்கை அதிபருக்கு என்ன நடந்ததோ, அதுதான் பிரதமர் மோடிக்கும் இங்கு நடக்கும். இந்தியாவில் உள்ள விஷயங்களைப் பார்க்கும்போது, மோடி முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டார் என்று நான் சொல்வேன். மேலும் நிலைமை இங்கு இன்னும் மோசமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடியும் ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடுவார்” எனக் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் இத்தகைய கருத்துக்கு, பா.ஜ.க தலைவர் பிரியங்கா திப்ரேவால், “படிக்காதவர்களின் அறிக்கைகள் குறித்து கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நான் நம்புகிறேன். திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டனர். பிரதமரைப் பற்றிய இதுபோன்ற கருத்துகளே இவர்களின் மனநிலை என்னவென்று காட்டுகிறது. மேலும் இது, அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை அவர்கள் மதிக்கவில்லை என்பதையே வெளிக்காட்டுகிறது” என்று பதிலளித்தார்.