இலங்கையில் மக்களின் போராட்டம் வலுத்துவரும் நிலையில், அதிபர் கோத்தபய, வரும் 13-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இதனிடையே, கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையின் ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. அதை போராட்டக்காரர்கள் மொத்தமாக எண்ணி, பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. உணவு தானியங்கள், பெட்ரோல், டீசல், சமையல் காஸ், மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த ஏப்ரல் முதல் அதிபர் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த மே 9-ம் தேதி பெரும் கலவரம் வெடித்ததால் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்துமே 12-ம் தேதி புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அதன்பிறகும் பொருளாதார சிக்கல் தீரவில்லை. மக்களின் போராட்டமும் ஓயவில்லை.
இந்நிலையில், மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்தது. ஆயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை சிறைபிடித்தனர். கடும் பாதுகாப்பையும் மீறி அவர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். போராட்டம் தீவிரமான நிலையில், அதிபர் கோத்தபய தப்பியோடிவிட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
தற்போதைய அரசியல் குழப்பம் தொடர்பாக நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் நேற்று முன்தினம் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இதில் அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில் பதவி விலகக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெருக்கடி அதிகரித்ததால் பிரதமர் பதவியை ராஜினமா செய்வதாக ரணில் அறிவித்தார். எனினும் அவர் அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்யவில்லை.
இந்தச் சூழலில் இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாபா அபேவர்தன கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிபர் கோத்தபய என்னை தொடர்பு கொண்டு ஜூலை 13-ம் தேதி பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார்” என்றார்.
இலங்கை சட்ட விதிகளின்படி அதிபர் பதவி விலகினால், அந்த நாட்டின் பிரதமர், புதிய அதிபராக அறிவிக்கப்படுவார். தற்போது பிரதமர் ரணிலும் ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பதால் நாடாளுமன்ற அவைத் தலைவர், தற்காலிக அதிபராக பதவியேற்க வேண்டும். அவர் 30 நாட்கள் பதவியில் நீடிப்பார். அதற்குள் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டும்.
தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை: இலங்கை தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறும்போது, “உறுதியளித்தபடி அதிபர் கோத்தபய ஜூலை 13-ம் தேதி பதவி விலக வேண்டும். பிரதமர் ரணிலும் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்” என்றனர்.
இதனிடையே, தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நேற்று சாலை, தெருக்களில் கூடி அதிபர், பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இருவரும் ராஜினாமா கடிதம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவ தளபதி வேண்டுகோள்: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறும்போது, “நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்துக்கு அமைதியான முறையில் தீர்வு காண வாய்ப்பு கிடைத்துள்ளது. அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ராணுவ வீரர்கள், போலீஸாரின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
அதிபர் மாளிகையை நேற்று முன்தினம் கைப்பற்றிய போராட்டக்காரர்கள், அங்கிருந்த எந்த பொருளையும் சேதப்படுத்தவில்லை. யாரும் எதையும் எடுத்துச் செல்லவில்லை. மிகுந்த கட்டுப்பாட்டுடன் போராட்டக்காரர்கள் செயல்படுகின்றனர். அதிபர் மாளிகை முழுவதும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் அதிபர் மாளிகையின் அனைத்து அறைகளையும் சோதனை செய்தனர். அப்போது ஒரு ரகசிய அறையின் அலமாரியில் கட்டுக்கட்டாக பணம் குவித்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பணத்தை போராட்டக்காரர்கள் மொத்தமாக எண்ணினர். இது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பணம் முழுவதையும் அதிபர் மாளிகையின் பாதுகாப்பு அதிகாரியிடம் போராட்டக்காரர்கள் ஒப்படைத்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. போராட்டக்காரர்களின் ஒழுங்கு, நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மீட்கப்பட்ட பணம் எவ்வளவு என்பது குறித்து பாதுகாப்பு படை தரப்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
பதுங்கு குழி: அதிபர் மாளிகையில் உள்ள கட்டிடத்தில் குறிப்பிட்ட அலமாரிகள் சந்தேகத்துக்கு இடமாக இருந்தன. அந்த அலமாரிகளை போராட்டக்காரர்கள் ஆய்வு செய்தபோது அவை ரகசிய கதவுகள் என்பது தெரியவந்தது. அலமாரிக்கு பின்னால் பதுங்கு குழி இருந்தது. பதுங்கு குழியின் அடியில் ரகசிய அறை அமைக்கப்பட்டிருக்கிறது. ரகசிய அறையை யாரும் திறக்க முடியாத வகையில் வலுவான இரும்பு கதவு போடப்பட்டிருக்கிறது. அந்த அறையை திறந்தால் பல்வேறு ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அதிபர் மாளிகையை சுற்றிப்பார்க்க படையெடுத்து வருகின்றனர். நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், படுக்கையறை, புல்வெளி தரை, பிரமாண்ட கட்டிடங்களை பார்த்து பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதிபர் மாளிகை சுற்றுலா தலமாக மாறியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புதிய அரசு: இலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகள் கொழும்பில் நேற்று ஆலோசனை நடத்தின. இதில் ராஜபக்ச குடும்பத்தினர் தொடங்கிய ரீலங்கா பொதுஜன பெரமுனா எம்.பி.க்கள் சிலரும் பங்கேற்றனர். இதில், அனைத்து கட்சிகளும் அடங்கிய புதிய அரசை அமைக்க உடன்பாடு எட்டப்பட்டது.