கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ஜூலை 13-ம் தேதி பதவி விலகவுள்ள நிலையில் தற்காலிக அதிபராக மகிந்த யாப்பா அபேவர்தனா நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரும் போராட்டம் அந்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் நேற்றுமுன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். மக்களைத் தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
போராட்டக்காரர்களால் அதிபர் மாளிகை கைப்பற்றப்படுவதற்கு முன்பாகவே அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் எங்கு சென்றிருக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
தொடர்ந்து பிரதமர் ரணில் தனிப்பட்ட இல்லத்தை அவர்கள் முற்றுகையிட தொடங்கினர். போராட்டக்காரர்கள் பிரதமருக்கு சொந்தமான வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். தொடர்ந்து வீட்டிக்கு தீ வைத்தனர்.
அடுத்தடுத்து பதற்றமான சம்பவங்களை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக ஒப்புக்கொண்டார். ஜூலை 13 ஆம் தேதி பதவி விலகுவதாக அதிபர் கோத்தபய கூறினார். பிரதமர் ரணில் ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார்.
ராஜினாமாவை அடுத்து இலங்கையில் அனைத்துக் கட்சி ஆட்சி நடக்கும் எனத் தெரிகிறது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவே ஆட்சிக்கு தலைமை தாங்குவார் என தெரிகிறது. இலங்கையின் தற்காலிக அதிபராக மகிந்த யாப்பா அபேவர்தனா நியமிக்கப்படுவார். அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்து கொண்ட அரசு செயல்படும். பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கம் அமைந்தவுடன் பதவியில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை தெரிவித்தார்.