கார்கிவ்: உக்ரைனின் கார்கிவ் நகரில் அடுக்கு மாடி குடியிருப்பில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதுகுறித்து உக்ரைன் ராணுவம் தரப்பில் கூறும்போது, “உக்ரைனின் கிழக்கு பகுதியான கார்கிவ் நகரில் ரஷ்யா தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 15-ம் மேற்பட்டோர் பலியாகினர். இன்னும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது” என்றனர்.
இந்தத் தாக்குதலிலிருந்து தப்பித்த லுட்மிலா என்ற பெண் கூறும்போது, “முதலில் சமையலறையை நோக்கி தாக்குதல் நடத்தினார்கள். நாங்கள் அனைவரும் கட்டிடத்தின் அடிபகுதிக்கு வந்துவிட்டோம்” என்றார்.
இந்தத் தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என்று உக்ரைன் அரசு விமர்சித்துள்ளது. ஆனால், ரஷ்யாவோ குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று விளக்கமளித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்ததால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. மாதக் கணக்கில் இந்தப் போர் தொடர்ந்து நடக்கிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகளவில் பெரும் பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள சீவிரோடோநெட்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றன.