திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை மற்றும் விசேஷ நாட்கள் மட்டுமின்றி தற்போது சாதாரண நாட்களிலும் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் 87,478 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில், 48,692 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.53 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமையான நேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பி இருந்தது. இதனால், பக்தர்கள் ஆஸ்தான மண்டபம் வரை நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். இவர்களுக்கு உணவு, பால் மற்றும் குடிநீர் வசதிகளை தேவஸ்தானம் செய்திருந்தது. மேலும், இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.