ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகளைக் கொண்ட தாய்மார் வீட்டு வேலைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதிப்பது குழந்தைகளின் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது

ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளைக் கொண்ட தாய்மார் வீட்டு வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்குவது அந்தக் குழந்தைகளின் குழந்தைப் பருவ வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என  ஆண் – பெண் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு தெரிவித்துள்ளது.

வீட்டு வேலைகளுக்காக (பயிற்றப்படாத தொழில்) பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பிரதேச செயலகங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு குடும்பப் பின்னணி அறிக்கை வழங்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டே வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்படவில்லையென்பதுடன், ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் காணப்பட்டால் அவர்களின் காப்புறுதி, பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.

  • ஆண் – பெண் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு

எனினும், வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் தாய்மார்களின் பிள்ளைகளின் குறைந்தபட்ச வயதை 02 ஆக குறைப்பதற்கும், இதுவரை அத்தியாவசியமாக இருந்த குடும்ப பின்னணி அறிக்கை சமர்ப்பிப்பதை இனி கட்டாயமாக்காமலிருப்பதற்கும் ஜூன் 27 ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆண் – பெண் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஆகியன அண்மையில் ஒன்றுகூடி இது தொடர்பில் நீண்டநேரம் ஆராய்ந்திருந்தன.

இதற்கைமய, ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளைக் கொண்ட இலங்கைத் தாய்மார்களை வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கல் மற்றும் வெளிநாடு செல்லும் தாய்மார்கள் குடும்பப் பின்னணி அறிக்கையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்காமல் இருத்தல் குறித்த அமைச்சரவைத் தீர்மானங்களை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனக்  குறித்த குழுவின் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தைகளின் ஆரம்பப் பருவ வளர்ச்சியில் தாய் முக்கிய பங்காற்றுவதுடன், இதனால் ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகளின் உள மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் இத்தீர்மானம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.