ஓ.பன்னீர்செல்வத்தை பொருளாளர் பதவியிலிருந்து நீக்க இபிஎஸ் தரப்பு முடிவு?

சென்னை வானரகத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் இடம் தயாராக உள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக பொருளாளரை மாற்ற தனித் தீர்மானம் இயற்றப்படக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு வெளியாக உள்ள நீதிமன்ற உத்தரவை அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று காலை 9 மணிக்கு உயர்நீதிமன்ற உத்தரவு வர உள்ள நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. மண்டபத்தின் திடலில் பொதுக்குழு மற்றும் செயற்குழுவிற்காக தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில் போல், மின்னணு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு, ஸ்கேன் செய்த பிறகே பொதுக்குழு நடைபெறும் இடத்திற்குள் செல்லும் வகையில் நவீன நடைமுறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
image
வெளியாட்கள் நுழைவதை தடுக்க, நுழைவு வாயிலில் 20 பரிசோதனை ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழுவில் பங்கேற்க முடியாது, செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவில் பங்கேற்க முடியாது. இரண்டு பொறுப்பிலும் உள்ள உறுப்பினர்களுக்கு தனி அடையாள அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை முதல் மண்டபம் அமைந்திருக்கும் இடம் வரை அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் அடங்கிய பதாகைகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. சென்னையின் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமி, ஒன்றரை கோடி தொண்டர்களின் ஒற்றைத் தலைவன் என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
image
பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் காலை 9 மணிக்கு உத்தரவு வழங்க உள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும், பொதுக்குழுவைப் போல் நீதிமன்ற உத்தரவையும் எதிர்நோக்கியுள்ளனர்.
இதற்கிடையே இன்று ஒருவேளை பொதுக்குழு நடத்தப்பட்டால், ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ள அதிமுக பொருளாளர் பதவியை பறிக்க ஈபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு புதிய பொருளாளரை நியமிக்கவும் ஈபிஎஸ் தரப்பு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.