ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்துள்ள நிலையில், சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பி.எஸ் இனி அரசியல் அனாதை என்று நத்தம் விஸ்வநாதன் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தலைமை அலுலகத்துக்கு சென்றார். அங்கே ஓ.பி.எஸ் உள்ளே செல்வதற்கு இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தடை ஏற்படுத்தினர். அதிமுக அலுவலகத்தின் கதவைப் பூட்டிவைத்தனர். இதனால், அங்கெ ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பு கல்வீச்சில் ஈடுபட்டதால் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் போர்க்களமானது. ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தடைகளை உடைத்துக்கொண்டு அதிமுக அலுவலகத்துக்குள் சென்றார்.
இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கியது. பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். மேலும், 16 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியதையடுத்து, தலைவர்கள் பேசி வருகின்றனர். அதிமுக பொதுக்குழுவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “ஓ.பி.எஸ் இனி அரசியல் அனாதை என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இந்த பொதுக்குழு ஏதோ வார்த்தை அலங்காரத்துக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க பொதுக்குழு என்று சொல்வதாக நினைக்காமல், அதிமுக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கக்கூடிய புதிய வரலாற்றை உருவாக்குகிற பொதுக்குழு இது. இந்த பொதுக்குழு அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து நடத்தப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி இப்போது இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஆகிவிடுவார்.
ஒருவர் இரட்டை தலைமையில் இருந்தார். ஓ பன்னீர்செல்வம் பற்றி எனக்கு கூடுதலாக தெரியும். உங்களை விட எனக்கு அவரை பற்றி அதிகம் தெரியும். எனக்கு அருகில்தான் அமர்ந்து இருப்பார். அவர் எனக்கு பக்கத்து மாவட்டம்தான்.
ஓ.பன்னீர் செல்வத்திற்கு கொடூரமான முகம் உள்ளது. மகா நடிப்புடா சாமி என்று சொல்லும் அளவிற்கு அவர் நடிப்பார். நடிகர் திலகம் என்ற பட்டமே ஓ.பன்னீர் செல்வத்திற்கு தரலாம். அவரின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே கிடையாது. ஓ.பன்னீர் செல்வம் யாரையும் நம்பமாட்டார் தன்னையே நம்பமாட்டார். பொறாமை, சூழ்ச்சி பிடித்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் பழக்கம் கொண்டவர் ஓ பன்னீர்செல்வம். பேசுவதும், செய்வதும் வேறு வேறாக இருக்கும். துரோகத்தின் முழு உருவம் .ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவிடம் பலமுறை ஓ.பன்னீர் செல்வமும் திட்டு வாங்கி உள்ளார். என் முகத்திலேயே முழிக்காதே என்று ஓ. பன்னீர் செல்வத்தை திட்டியுள்ளார் ஜெயலலிதா. தேனியில் நாம் தோற்கவே நீதான் காரணம் என்று ஓ பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா திட்டி இருக்கிறார்.
இதனால், 6 மாதம் ஓபிஎஸ் இடம் ஜெயலலிதா பேசவில்லை. துரோகி ஒழியட்டும் என்று ஜெயலலிதாவே ஓ. பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்து இருக்கிறார். மக்களை பல காலம் ஏமாற்ற முடியாது. துரைமுருகனை சட்டசபையில் பாராட்டி பேசியவர் ஓ.பன்னீர் செல்வம்.
கருணாநிதியின் பராசக்தி வசனத்தை எல்லாம் மனப்பாடம் செய்துள்ளார் ஓ.பி.எஸ். ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் ஓ.பன்னீர் செல்வத்தை மன்னிக்காது. கருணாநிதியை தீயசக்தி என்று சொன்னவரை பாராட்டினால் எம்ஜிஆர் ஆன்மா மன்னிக்காது. எதிரியைக் கூட மன்னித்து விடலாம் துரோகியை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. அதிமுக ஆட்சியில் வருவதற்காக இருந்த ஓபிஎஸ் என்ற தடை நீங்கி விட்டது. ஓ. பன்னீர் செல்வம் இனி அரசியல் அனாதை” என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“