கட்டுமானத் தொழிலில் வட இந்தியர்களின் ஆதிக்கத்தைத் தடுக்க, வருங்காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கட்டிட ஒப்பந்ததாரர்கள் அதிகளவில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மற்றும் முதல் மாநில மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் செயலாளர் யுவராஜ் முன்னிலை வகித்தார். இதில், மாநில பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாநாட்டு மலரை வெளியிட்டு பேசியது:
கடந்த ஓராண்டில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நல வாரியங்களில் இணைக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்ததாரர்கள், கட்டுமானத் துறையினர் இணக்கமாக இருந்தால்தான் பொருளாதாரம் உயரும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.20 கோடிக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் பாதி, கட்டுமானத் துறைக்குத்தான் கிடைக்கும்.
தமிழகத்தில் கட்டுமானத் தொழில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், இதில் ஈடுபடக்கூடியவர்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதேநிலை தொடர்ந்து நீடித்தால், கட்டுமானத் தொழிலில் வட இந்தியர்களின் ஆதிக்கம் வந்துவிடும். இது சாதாரண விஷயமல்ல.
தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர் பெங்களூருவில் கட்டுமானத் தொழிலுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் பணியாற்றுவது குறைந்து வருகிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? ஏதோ ஒருவகையில் நம் இடத்தை, நாமே விட்டுக்கொடுப்பது நியாயமில்லை. எனவே, கட்டுமானத் துறையில் உள்ள ஒப்பந்ததாரர்கள், மேஸ்திரிகள், நிறுவன மேலாளர்கள் உள்ளிட்டோர், இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு தந்தால்தான், தமிழகத்தின் பொருளாதாரம் உயரும். இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரியவற்றை செய்துதர உறுதுணையாக இருப்பேன் என்றார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, ‘‘திருச்சியில் ரூ.1,000 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், சுற்றுச்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதனால் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, “கட்டுமானத் துறையின் உயர்வுக்கு தேவையானவற்றை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றுவோம்” என்றார்.
மாநாட்டில், கட்டுமானப் பொருட்கள் விலை நிர்ணயக்குழு அமைக்க வேண்டும். கட்டுமானப் பொருட்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். நிலத்தரகர்களை அமைப்புசாரா தொழிலாளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், இந்திய பொறியாளர் சங்க முன்னாள் அகில இந்தியத் தலைவர் ராதாகிருஷ்ணன், கூட்டமைப்பின் பொருளாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.