பாட்னா: ‘கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பார்கள். அதுபோல், ஏழையாக இருந்த போதிலும் கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை மாணவனுக்கு அமெரிக்க கல்லூரி பல்வேறு சிறப்புகளை வழங்கி கவுரவப்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம், புல்வாரிசெரீப் மாவட்டத்தில் உள்ள கோன்புரா என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் பிரேம் குமார். தற்போது, பிளஸ் 2 முடித்துள்ளார். தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஒரு தினக்கூலி. குடிசை வீட்டில் பசி பட்டினியுடன் வாழ்ந்தபோதும், படிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார் பிரேம் குமார். அதில், அதிகம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மேலும், தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்கான சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவரை பற்றிய தகவலை கேள்விப்பட்ட, அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியான ‘லபயேட்டி கல்லூரி’ நிர்வாகம் கேள்விப்பட்டது. இது, பிரேம் குமாருக்கு தனது கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் படிப்பில் சேர்ந்து படிக்க இடம் ஒதுக்கியுள்ளது. மேலும், இவருடைய படிப்புக்கான முழு செலவையும் ஏற்று, அதற்காக ரூ.2.5 கோடி நிதியுதவியும் அளித்துள்ளது. ‘டையர் ஸ்காலர்ஷிப்’ என்ற பெயரில் வழங்கப்படும் இந்த நிதியுதவியை, உலகளவில் 6 பேர் மட்டுமே இந்தாண்டு பெற்றுள்ளனர். இந்தியாவை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர் ஒருவர் இந்த நிதியுதவி பெறுவது இதுவே முதல்முறை.