புதுடெல்லி: ஹரியாணா முன்னாள் முதல்வர் பஜன் லால் மகன் குல்தீப் பிஷ்னோய், ஆதம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். பாஜக ஆளும் ஹரியாணாவில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. இம்மாநிலத்தில் காலியான 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அஜய் மக்கான் தோல்வி அடைந்தார்.
காங்கிரஸ் கட்சியின் குல்தீப் பிஷ்னோய் கட்சி மாறி வாக்களித்ததும், மற்றொரு உறுப்பினரின் வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டதுமே இதற்குக் காரணம் ஆகும். இதையடுத்து, குல்தீப் பிஷ்னோய் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், குல்தீப் பிஷ்னோய், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை குல்தீப் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையான தேசியவாதியான அவருடன் உரையாடியது பெருமையாக இருந்தது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.