நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் அம்மாநிலத்தின் பலபகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
வல்சாத், நவ்சாரி, தாபி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. முக்கிய சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவுரங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனிடையே, சோட்டா உதய்பூரில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி கனமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தொடர்ந்து, வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.