கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள குண்டமங்கடவு பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் சுவாமி சந்தீபானந்தகிரி. சி.பி.எம் கட்சிக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் ஆதரவாக கருத்துகளை கூறிவருபவர். இதனால் சங் பரிவார் அமைப்புகள் இவரை கம்யூனிஸ்ட் சாமியார் என அழைப்பது வழக்கம். 2018-ம் ஆண்டில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த சமயத்தில், அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார் சந்தீபானந்தகிரி. சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை மாநில அரசு செயல்படுத்தும் முடிவு சரிதான் எனவும் தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வந்தார் சந்தீபானந்தகிரி. இந்த நிலையில் 2018-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி அதிகாலை நேரத்தில் சுவாமி சந்தீபானந்தகிரியின் ஆசிரமத்தின் ஒரு பகுதி தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் ஆசிரமம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக் உள்ளிட்ட 3 வாகனங்களும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டன.
அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்ததுடன், ஆசிரமத்தை நேரில் சென்று பார்வையிட்டு இது வர்க்கவாதிகளின் செயல் என சங் பரிவார் அமைப்புகளைச் சாடினார். மேலும், முதல்வர் பினராயி விஜயனே விசாரணையை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார். காவல்துறை முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் உள்ளதால் விசாரணை குதிரை பாய்ச்சலில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தச் சம்பவம் நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் விசாரணையில் சிறு முன்னேற்றம்கூட ஏற்படவில்லை. ஆசிரமமும், வாகனங்களும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டன என்ற தகவலை மட்டுமே போலீஸாரால் கண்டுபிடிக்க முடிந்தது.
சுவாமி சந்தீபானந்தகிரியின் ஆசிரமத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுதாக இருந்ததால் ஆசிரமத்தை எரித்தது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் ஆசிரமத்தை சுற்றி சில கிலோமீட்டர் தூரத்துக்கு சிசிடிவி கேமராக்கள் ஆய்வுசெய்யப்பட்டும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. திருவனந்தபுரம் சிட்டி போலீஸ் நடத்திய விசாரணை சரியில்லை என சந்தீபானந்தகிரி முதல்வருக்கு கோரிக்கை வைத்ததால், வழக்கு க்ரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடத்தியபோதும் விசாரணையில் துரும்பளவு முன்னேற்றம் ஏற்படவில்லை.
எனவே, ஆசிரமம் எரிக்கப்பட்ட வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவர க்ரைம் பிராஞ்ச் முடிவு செய்துள்ளது. இது பற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணை தவறான பாதையில் சென்றதால் இந்த வழக்கில் குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியவில்லை என க்ரைம் பிராஞ்ச் போலீஸ் தெரிவித்திருக்கிறதாம். எனவே இது பற்றி கோர்ட்டுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் க்ரைம் பிரான்ஞ்ச் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய சுவாமி சந்தீபானந்தகிரி, “இந்த வழக்கு விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவது சரியான நடவடிக்கை அல்ல. ஆசிரமத்தை தீ வைத்து எரித்தவர்கள் அஞ்சலி என எழுதிய ஒரு மலர் வளையத்தையும் வைத்துச் சென்றனர். அதில் உள்ள கையெழுத்தை வைத்து விசாரணை நடத்தியிருக்கலாம். அதெல்லாம் செய்யாமல் நாங்கள் தீ வைத்ததுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த போலீஸார் முயல்கின்றனர். இந்த வழக்கு சம்பந்தமான தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு செய்வேன்” என்றார்.
முதல்வர் பினராயி விஜயன் நேரடியாக தலையிட்ட ஆசிரமம் எரிக்கப்பட்ட வழக்கில், மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் விசாரணை நடத்தியும் துப்புதுலங்கவில்லை. இது கேரள அரசின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.