அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகி பின்னர், ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து விவாதிக்க ஜூலை 11-ம் தேதி சிறப்புப் பொதுக்குழு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
அவர்மீது தண்ணீர் பாட்டில் வீச்சும் அரங்கேறியது. இதையடுத்து, பொதுக்குழுவை நிறுத்த ஓ.பி.எஸ் தரப்பும், திட்டமிட்டபடி நடத்த எடப்பாடி தரப்பும் மாறி மாறி நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்தனர். முன்னதாக, ஒற்றைத் தலைமை விவகாரத்தை ஜூன் 23-ல் நடந்த பொதுக்குழுவில் விவாதிக்கக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவை ஓ.பி.எஸ் தரப்பு பெற்றதால், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவை எப்படியும் நிறுத்திவிடலாம் என்று அதீத நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவுக்கான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை, பொதுக்குழு நடத்த அனுமதி எனத் தொடர் பின்னடைவைசி சந்தித்தார் ஓ.பி.எஸ்.
இந்நிலையில், குறித்தபடி அ.தி.மு.க-வின் செயற்குழு, பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஶ்ரீவாரு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக, காலை 6 மணிக்கே பொதுக்குழு தொடங்கப்படும் என்று தகவல் வெளியானதால், அதிகாலை 5:30 மணிக்கே மண்டபத்துக்கு அ.தி.மு.க-வினர் படையெடுக்கத் தொடங்கினார்.
ஆனால், கடந்த முறைபோல் இல்லாமல், இந்த முறை மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 200-க்கும் மேற்பட்ட தனியார் பவுன்சர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களிடமும், அ.தி.மு.க தொண்டர்களிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டனர். அதன்படி, காலை 6:30 மணிக்கே எடப்பாடி தனது வீட்டிலிருந்து கிளம்பினார். அண்ணா நகர் பாலம் முதல் பொதுக்குழுவுக் கூட்டம் நடக்கும் மண்டபம் வரை தொண்டர்கள் அவரை பூ தூவி வரவேற்றனர். இதனால், 8:55 மணிக்குத்தான் மண்டபத்துக்கு வந்தார். அதன்படி, காலை 9:05 மணிக்கு செயற்குழு நடைபெற்றது.
இதையடுத்து, பொதுக்குழு 9:20-க்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கியது. மேடைக்கு வந்த எடப்பாடியை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். குறிப்பாக, ஓ.பி.எஸுக்காக பொருளாளர் இருக்கையும், வைத்திலிங்கம் ஆகியோருக்கும் இருக்கை போடப்பட்டிருந்தன. ஏற்கெனவே வெளியிட்ட 16 தீர்மானங்களில் முதல் 8 தீர்மானங்களை ஆர்.பி.உதயகுமார் மிக ஆக்ரோஷமாக வாசித்தார். அதிலிருந்த தீர்மானத்தின்படி, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 8 தீர்மானங்களை ஓ.எஸ்.மணியன் வாசிக்க, உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து நிறைவேற்றப்பட்டது.
விழாவில் தொடக்க உரையாற்றிய நத்தம் விஸ்வநாதன், “நாணயத்தின் இருபக்கங்கள் போல, ஓ.பி.எஸுக்கு மற்றோரு பக்கம் உள்ளது. அது துரோகம் நிறைந்த கொடூர முகம்” என்று மிக கடுமையாக விமர்சித்தார். அதேபோல, “அம்மாவே, ச்சீ போ…” என்று ஓ.பி.எஸை துரத்தினார். நாங்கள்தான் அம்மாவை சமாதானம் செய்தோம்” என்று புதுக்கதையைக் கூறினார். குறிப்பாக, பல துரோகங்களைச் செய்த ஓ.பி.எஸ் நமக்குத் தேவைத்தானா என்று ஓ.பி.எஸை கட்சியிலிருந்து நீக்கும் முடிவுக்கு அடித்தளம் போட்டார்.
அதற்கு ஆதரவு தெரிவிப்பதுபோல உறுப்பினர்கள் ஆரவாரம் செய்தனர். ஆனால், இதை இ.பி.எஸ் ரசிக்கவில்லை. அப்போது அருகிலிருந்த கே.பி.முனுசாமி காதில் ஏதோ கூற, அவர், “அவற்றையெல்லாம் தீர்மானம் போட்டு பாத்துக்கலாம்” என்று மேடையில் மற்றொரு மைக்கில் பேசினார். அப்போது திடீரென எழுந்து வந்த சி.வி.சண்முகம், “என்ன பாத்துக்கலாம், அதையெல்லாம் உடனே தூக்கி போட்டுறணும்” என்று ஆவேசமாகக் கத்தினார். மேலும், எடப்பாடியிடம் 5 நிமிடத்துக்கும் மேலாகப் பேசினார்.
இதற்கிடையே, அ.தி.மு.க அலுவலகத்தில் ஓ.பி.எஸ் வருகையினால், தலைமை அலுவலகம் போர்க்களமானது. இது குறித்த தகவலை மைத்திரேயன் எடப்பாடியிடம் கூறவும், ‘`கட்சியிலிருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுங்க” என்று வேலுமணியிடம் கூறப்பட்ட ஐந்தே நிமிடத்தில், ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
பொதுக்குழுவில் பேசிய ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எப்போதும் இல்லாத அளவுக்கு மிககடுமையாகவே ஓ.பி.எஸை விமர்சித்தனர்.
இதையடுத்து, பொன் விழா காணும் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தன் கன்னிப் பேச்சை 11:55 மணிக்கு தொடங்கினார். “சில எட்டப்பர்களின் சூழ்ச்சி ஒருபோது பலிக்காது. தி.மு.க-வுடன் ஓ.பி.எஸ் இணைந்து கட்சியை அழிக்க நினைக்கிறார்.
அவருக்கு எப்போதும் சுயநலம்தான் முக்கியம்” என்று மிக கடுமையாக விமர்சித்தார். மேலும், தி.மு.க ஆட்சியை சரமாரியாக விமர்சித்தும், தன் அரசியல் பயணம் குறித்தும் சுமார் 45 நிமிடங்கள் பேசினார். இறுதியாக, அ.தி.மு.க-வின் பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக எடப்பாடி அறிவித்ததும் பொதுக்குழு நிறைவு பெற்றது.
கடந்த பொதுக்குழுவின்போது விழா ஏற்பாட்டைச் செய்த பென்ஜமின், எடப்பாடி, ஓ.பி.எஸ் ஆகியோருக்கு சமமான மரியாதை கொடுத்திருந்தார். இதனால், அவர்மீது மேடையிலேயே எடப்பாடி மிகக் கடுமையாக நடந்து கொண்டார்.
ஆனால், இந்த முறை அவரை குளிர்விக்க, எங்குத் திரும்பினால் எடப்பாடி முகம் தெரியும்படி, பென்ஜமின் விழாவை ஏற்பாடு செய்திருந்தார். பிரம்மாண்ட பந்தல், கோட்டை போன்ற அலங்காரம் ஆகியவற்றை சிறப்பாக செய்திருந்தார். அதேபோல, எடப்பாடிக்கு வெள்ளி வால் ஒன்றையும் பரிசளித்தார்.
இதனால், அசந்துபோன எடப்பாடி, பென்ஜமினை மேடையில் வைத்தே இறுகக் கட்டிப்பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக அ.தி.மு.க-வின் டிரேட் மார்க்-க்கான காலில் விழும் வழக்கத்தை முன்னாள் அமைச்சர்கள் பாலகிருஷ்ணன் ரெட்டியும், பென்ஜமினும் தொடங்கி வைத்தனர்… இப்படியாக அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்து முடிந்தது!