கோவை
கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் 15-வது லீக் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
15-வது லீக் போட்டி
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும், திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து திருச்சி வாரியர்ஸ் அணியின் வீரர்கள் அமித் சாத்விக், சந்தோஷ் ஷிவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். இதனால் அணியின் ஸ்கோர் 4.5 ஓவரில் 44 ரன்களாக உயர்ந்தது. அதன்பிறகு அமித் சாத்விக் 18 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அடுத்து வந்த நிதிஷ் ராஜகோபால் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சந்தோஷ் ஷிவ் 28 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு நிரஞ்சன்(17 ரன்கள்), ஆகாஷ் சும்ரா(1 ரன்), கோகுல்மூர்த்தி(1 ரன்), கணேஷ்(0), அஜய் கிருஷ்ணா(1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதற்கிடையில் மதிவாணன் ரன் அவுட் செய்யப்பட்டார். எனினும் மறுமுனையில் அதிரடி காட்டிய முரளி விஜய் அரைசதம் கடந்தார். 35 பந்துகளில் 61 ரன்கள்(3 பவுன்டரி, 5 சிக்சர்) சேகரித்த நிலையில், அவரும் அபிஷேக் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதனால் திருச்சி வாரியர்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கோவை வெற்றி
இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் அணி ஆடியது. தொடக்க வீரர்களாக களம் கண்ட கங்கா ஸ்ரீதர், சுரேஷ் குமார் ஜோடி எதிரணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். அந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 42 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. சுரேஷ் குமார் (15 ரன்கள்) விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கங்கா ஸ்ரீதர் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து வந்த ஷிஜித் சந்திரன்(17 ரன்கள்), முகிலேஷ்(6 ரன்கள்) தாக்குப்பிடிக்கவில்லை. நிதானமாக ஆடிய சாய் சுதர்ஷன் 27 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஷாருக்கான் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இது அந்த அணியின் 2-வது வெற்றியாகும். ஷாருக்கான்(24 ரன்கள்), அபிஷேக் தன்வர்(1 ரன்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.