புதுடெல்லி: சிறையில் செல்போன் பேசவும், சொகுசாக இருக்கவும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், 81 சிறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ.1.5 கோடி லஞ்சம் வழங்கியதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்து, இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக டிடிவி தினகரனிடம் மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் கடந்த 2017ல் கைது செய்தனர். இவர் டெல்லி ரோகினி சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, சில தொழிலதிபர்களை செல்போன் மூலம் மிரட்டி, ரூ.200 கோடி பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், சுகேஷின் மனைவி லீனாவும் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, டெல்லி சிறையில் இருந்து தன்னை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், சிறை அதிகாரிகள் 2 ஆண்டில் தன்னிடம் இருந்து ரூ.12.5 கோடி லஞ்சம் வாங்கி இருப்பதாகவும் சுகேஷ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. சுகேஷிடம் ரோகினி சிறை அதிகாரிகள், ஊழியர்கள் என 81க்கும் மேற்பட்டோர் லஞ்சம் வாங்கி உள்ளனர். அவர்கள் தான் சுகேஷுக்கு செல்போன் ஏற்பாடு செய்து தந்துள்ளனர். மேலும், சுகேஷின் மனைவி லீனா சிறையில் எந்த சிரமமும் இல்லாமல் இருக்க சகல வசதிகளையும் செய்து தந்துள்ளனர். இதற்காக மாதம் ரூ.1.5 கோடியை சுகேஷிடமிருந்து அதிகாரிகள் லஞ்சமாக பெற்று அதை பகிர்ந்துள்ளனர். மேலும், சுகேஷ் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையை படமெடுக்க வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் அவர்கள் மறைத்துள்ளனர். திரைச்சீலை, பெட்டிகள், தண்ணீர் பாட்டில் போன்றவற்றால் சிசிடிவியில் எதுவும் சரியாக தெரியாதபடி மறைத்துள்ளனர். எனவே, லஞ்சம் வாங்கியதாக 81 சிறை அதிகாரிகள், ஊழியர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஆதாரங்களின் அடிப்படையில் 8 சிறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.