தருமபுரி: பயிர் விளைச்சலை அதிகரிக்க மீன் அமிலம் பயன்படுத்துவதுபோல், பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகளைக் கொண்டு பறவைக் கரைசல் தயாரித்து திரவ உரத்தை தருமபுரியைச் சேர்ந்த இளம் விவசாயி கண்டு பிடித்துள்ளார். இதனை பயன்படுத்துவதன் மூலம் விளைச்சல் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பாப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த்குமார் (24). அதேபகுதியில், முட்டைக் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். பண்ணையில் பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும் கோழிகளை புதைக்கவோ அல்லது கம்போஸ்ட் உரமாக மாற்றவோ வேண்டுமென மத்திய அரசின் சுற்றுச்சூழல் விதிகள் வலியுறுத்துகிறது.
இந்நிலையில், உயிரிழக்கும் கோழிகளை திரவ உரமாக்கி பயிர்களுக்கு பயன்படுத்தும் முறை குறித்து சீனிவாசன் என்பவர் உதவியுடன் ஹேமந்த்குமார் கற்றுள்ளார். இயற்கை வேளாண் முறையில் மீன் கரைசல் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அதைப்போலவே, இறந்த கோழிகளைக் கொண்டு ‘பறவைக் கரைசல்’ தயாரிப்பில் ஈடுபட்டார்.
இதுகுறித்து ஹேமந்த்குமார் கூறியது: கோழிகளை துண்டுகளாக்கி, மண் பானையில் இட்டு அதனுடன் சாணக் கரைசல், கரும்புச் சாறு (வெல்லமும் பயன்படுத்தலாம்), தண்ணீர் ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து வைக்க வேண்டும். பின்னர் பானையை மூடி, ஏற்கெனவே கோழி எரு மூலம் தயார் செய்து வைத்துள்ள படுக்கை மீது பானைகளை வரிசையாக அடுக்க வேண்டும். பின்னர், மிதமான ஈரப்பதமுள்ள கோழி எருவைக் கொட்டி பானைகள் மூடும் அளவு மூடாக்கு உருவாக்க வேண்டும்.
இந்த மூடாக்கின் மீது சாக்குகளை போர்த்தி, ஈரப்பதம் குறையாமல் 90 நாட்கள் வரை நீர் தெளித்து பராமரிக்க வேண்டும். நொதி வினைகளால் கோழிகளின் இறகு, எலும்பு என 90 சதவீதம் பகுதிகள் கரைசலாக மாறியிருக்கும். இக்கரைசலை வடித்து 20 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வீதம் கலந்து வீரியம் குறைக்க வேண்டும்.
நெல்லி, சப்போட்டா, கொய்யா, தென்னை உள்ளிட்ட மரங்களின் வேர்ப்பகுதியைச் சுற்றி, மரத்துக்கு 2 லிட்டர் வீதம் இந்தக் கரைசலை ஊற்ற வேண்டும். 6 மாதத்துக்கு ஒருமுறை இவ்வாறு ஊற்றினால் போதும். இவ்வாறு ஊக்கமளிக்கப்பட்ட மரங்கள், வழக்கத்தை விட 20 சதவீதம் கூடுதல் விளைச்சல் தருகின்றன.
உயிரிழந்த கோழிகளை பறவைக் கரைசலாக மாற்றுவதன் மூலம் சூழல் மாசு தடுக்கப்படுவதுடன் பயிர்களும் அதிக விளைச்சல் தருகிறது. மொத்தத்தில், இந்த தொழில்நுட்பம் இரட்டை பயனளிப்பதாக உள்ளது என்றார்.
மாவட்ட சுற்றுச் சூழல் அலுவலர் சாமுவேல் ராஜ்குமார் கூறும்போது, ‘உயிரிழக்கும் கோழிகளைக் கொண்டு திரவ உரம் தயாரிப்பது இந்திய அளவில் இதுவே முதல் முறை. பறவைக் கரைசலை அதிக அளவில் தயார் செய்து விவசாயிகளுக்கு சோதனை முறையில் பயன்பாட்டுக்காக இலவசமாக வழங்க ஹேமந்த்குமார், முடிவு செய்துள்ளார்.
கோழிப் பண்ணையாளர்கள் ஹேமந்த்குமாரை அணுகி இந்த தொழில்நுட்பத்தை இலவசமாக அறிந்து செயல்படுத்த, நாட்டின் சூழல் மேம்பாட்டுப் பணியில் பங்கெடுக்கலாம்’ என்றார்.