சென்னையை சேர்ந்த பாத்திமா (பெயர் மாற்றம்) என்பவர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 7- ம் தேதி புகார் அளித்தார். அதில், `தன்னுடைய 14 வயது மகள், தனியார் பள்ளயில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆன்லைனில் LUDO எனும் கேம் விளையாடி வந்தார். அப்போது திருவெற்றியூரை சேர்ந்த விக்னேஷ்வரன் (25) என்கிற ஜோக்கர் என்பவர் பழக்கமாகியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் விக்னேஷ்வரனும் எனது மகளும் எல்லை மீறி ஆபாசமாக பேசி வந்துள்ளனர். அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவதாக எனது மகளை விக்னேஷ்வரன் மிரட்டியுள்ளார். வெளியிடாமலிருக்க வீடியோ காலில் நிர்வாணமாக பேச வேண்டும் என்று விக்னேஷ்வரன் என்னுடைய மகளை கட்டாயப்படுத்தியிருக்கிறார். அதன்படி என்னுடைய மகளும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியிருக்கிறார். அதையும் விக்னேஷ்வரன், பதிவு செய்து கொண்டு மீண்டும் என்னுடைய மகளை மிரட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டுக்கு வந்த விக்னேஷ்வரன், ஆடியோ, வீடியோவைக் காண்பித்து என்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். மேலும் என்னுடைய மகள் தொடர்பான வீடியோக்களை வெளியிடாமலிருக்க ஒரு வீடியோவுக்கு 25 ஆயிரம் ரூபாய் விதம் 50 லட்சம் தர வேண்டும் என விக்னேஷ்வரன் மிரட்டியுள்ளார். பின்னர் பணம் அனுப்ப கூகுள் பே UPI ID-யையும் என்னுடைய மகளின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். எனவே சம்பந்தப்பட்ட விக்னேஷ்வரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பாத்திமா குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மேற்பார்வையில் துணை கமிஷனர் மகேஷின் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விக்னேஷ்வரனைத் தேடிவந்தனர். மாணவி தரப்பில் புகாரளிக்கப்பட்டதும் விக்னேஷ்வரன், சில ஆடியோக்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். உடனடியாக போலீஸார் அதை அழித்துள்ளனர். தொடர்ந்து விக்னேஷ்வரனின் செல்போன் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்த போது செங்கல்பட்டு பகுதியைக் காட்டியது.
உடனடியாக அங்குச் சென்ற தனிப்படை போலீஸார் தலைமறைவாக இருந்த விக்னேஷ்வரனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த விக்னேஷ்வரன், இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். வேலைக்கு செல்லாத அவர், தன்பாலின சேர்க்கையாளர்களுக்கான ஆப்ஸைப் பயன்படுத்தி சிலரைச் சந்தித்துள்ளார். தன்பாலின சேர்க்கையாளர்களை மிரட்டி செல்போன், பணத்தை விக்னேஷ்வரன் பறித்ததாக கடந்த 2021-ம் ஆண்டு சாத்தாங்காடு காவல் நிலையத்தில் விக்னேஷ்வரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த விக்னேஷ்வரன், செங்கல்பட்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி, சமூக வலைதளங்கள், செல்போன் விளையாட்டுக்கள் மூலம் சிறுமிகள், பெண்களிடம் பழகி வந்திருக்கிறார். அப்படிதான் சென்னை மாணவியிடமும் அண்ணன் என்று கூறி பழகி வந்த விக்னேஷ்வரன், ஒரு கட்டத்தில் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டியிருக்கிறார். விக்னேஷ்வரனின் மூளைச்சலவை, பயம் காரணமாக மாணவியும் அவர் சொன்னப்படி நடந்திருக்கிறார். மாணவியின் தனிப்பட்ட வீடியோக்கள், ஆடியோக்கள் கிடைத்ததும் விக்னேஷ்வரன் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரையடுத்து விக்னேஷ்வரனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். தொடர்ந்து அவரின் செல்போனை ஆய்வு செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மாணவிக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
மாணவியின் குடும்பத்தினருக்கு இந்த தகவல் எப்படி தெரிந்தது என்பதை தனிப்படை போலீஸார் கூறுகையில், “மாணவி பயன்படுத்தி வந்த செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்று வந்திருந்ததது. அதில், ஒரு வீடியோவுக்கு 25,000 ரூபாய் அனுப்ப வேண்டும். இல்லையெனில் உன்னுடைய போட்டோ, வீடியோவை வீட்டின் முன் பேனராக வைத்துவிடுவேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த எஸ்.எம்.எஸைப் பார்த்தப்பிறகு மாணவியிடம் அவரின் குடும்பத்தினர் விசாரித்தபோதுதான் முழு தகவல்களும் தெரியவந்திருக்கிறது” என்றனர்.