“நந்தா ரெடியாகிட்டான். இன்னும் க்ளைமாக்ஸ் மட்டும்தான் பாக்கி” எடிட்டிங்கில் இருந்து எழுந்து வருகிறார் டைரக்டர் பாலா. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற டைரக்டர்.
தீபாவளி ரேஸில் முரட்டுக் குதிரையாக களம் இறங்கப்போகிற நந்தா பற்றி பாலாவிடம் பேசியதிலிருந்து.
“நந்தா யாரு?”
“மனசுக்கும் புத்திக்கும் மத்தியில வண்டி ஒட்டறதுதான் வாழ்க்கை நட்பு. உறவு, காதல்னு ஆரம்பிச்சு எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் அழுக்கு இருக்கு. ஒரு தாய் தன் பிள்ளை மேல வைத்திருக்கிற பாசத்தைத்தான் உலகத்திலேயே உசத்தியான விஷயமா மதிக்கிறேன். மத்த எல்லாமே அதுக்கு முன்னால ஒடி ஒளிஞ்சிரும். நந்தாக்கும் அப்படி ஒரு அம்மா இருந்தா அவ நல்லா இருந்திருந்தா நந்தா இன்னும் நல்லா இருந்திருப்பான்னு தோணுச்சு. “ஏன் இப்படி ஆச்சு’னு யோசிச்சதுதான் படம்!”
“இதென்ன… மொட்டைத் தலை ஹீரோக்களோட சீஸனா?”
“அப்படிப் பார்த்தா முதல் மொட்டை நாங்கதான் என்று சிரிக்கிறார் பாலா. “சூர்யா தான் நந்தானு முடிவு பண்ணின நிமிஷத்திலேர்ந்து அவர் அப்படியே சரண்டராகிட்டார். முடி முகம் முழினு அப்படியே நந்தாவா மாற ஆரம்பிச்சார் ரொம்ப டிஸிப்பிளினான ஆளு. இப்போ சூர்யா வோட பாடி லாங்குவேஜே மாறிப் போய் நந்தா மாதிரிதான் அலையறார். பழைய நடைமறந்து போச்சுங்கனு சிரிக்கிறார். நடிகர்கள் பலர் கிடைக்கலாம். ஆனா, கலைஞர்கள் அபூர்வம். ஒரு காட்சியை விவரிக்கும்போது அதை நடிக்காமல் அப்படியே வந்து வாழ்ந்துவிட்டுப் போகிற அற்புத மான திறமைசாலி ராஜ்கிரண். லைலாவை நகரத்துப் பொண்ணா தான் நிறையப் பார்த்திருக்கோம். இதுல இலங்கைத் தமிழச்சி வர்றாங்க. நந்தா உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தருவான்!”
“ராஜாவோடு ஒரு சூப்பர் ஹிட் படம் தந்துட்டு அடுத்த படத்துக்கு யுவன்சங்கரை தேர்ந்தெடுத்தது ஏன்?”
“ராஜா சார் எல்லாம் பண்ணிட்டார். அவர் இனிமே தான் புதுசா பண்ணி தன்னை நிரூபிச்சுக்கணும்னு இல்லை. ஆனா, யுவன் இப்போதான் வர்றார். அவர் வயசுக்கே உரிய ஒரு வேகம் அவர் இட்டே இருக்கு சில ஏரியாக்கள்ல சின்னச் சின்ன உணர்வுகளையும் மீட்டற மாதிரி புதுசா ட்யூன் போடறார். இதுல ஆறு பாட்டும் அசத்தியிருக்கார்.”
“தமிழிழம், அகதிகள் பிரச்னை, போராளிகள்னு ஒரு ஏரியா நந்தாவுல வருதோ?”
“நேத்து அமெரிக்காவுல ட்வின் டவர் தகர்க்கப்பட்டதற்குப் பதறின என் மனசு, நாளைக்கு ஆப்கானிஸ்தான்ல குண்டு விழுந்தாலும் பதறும் எனக்கு எல்லாமே ஒண்ணுதான். ரத்தமோ. கண்ணீரோ எங்கே சிந்தினாலும் தாங்க முடியாது சார். பசி, பயம், தூக்கம் மாதிரி உணர்ச்சிகள் அதை அனுபவிச்சவனுக்குத்தான் புரியும். மரணபயம்’னா என்னன்னு கேட்டா டிஸ்கவரி சேனல்ல வருமே. அதானேனு கேட்கிறவங்கதான் இங்கே அதிகம்.
‘என்ன சார் ஒரு வாரமா டி.வி-யில போர் போர்னு சொல்றாங்க. ஆனா, அடிச்சுத்துவம்சம் பண்ணாம லேட் பண்றாங்களே’னு ஒரு என்டர்டெயின்மெண்ட்டுக்கு ஏங்கறவங்களுக்கு வலி புரியாது. காலையில கண்ணு முழிச்சாத்தான் உசிரோட இருக்கோம்னு உறுதிப்படுத்திக்க முடியற கோடிக்கணக்கான மக்களோட சோகம் பெருசு. உங்க கேள்விக்குப் பதில் சொல்ல மூணு மணி நேரம் தேவைப்படும். அதுதான் ‘நந்தா!’
“சேது உங்களுக்குப் புரிய வைத்த விஷயம் என்ன?”
“நம்பிக்கை சார். ஒரு சின்ஸியரான உழைப்பை ஏத்துக்க எப்பவும் மக்கள் தயாரா இருக்காங்கன்னு ஒரு நம்பிக்கை! சேதுலகூட ‘கானக்கருங் குயிலேனு தேவையே இல்லாம ஜோதிலட்சுமி டான்ஸெல்லாம் வந்தது. நந்தால நான் இன்னும் இயல்பான தளத்துக்கு வந்துட்டேன். கண்ணால, கைகளால, ஏன் மெளனத்தாலகட பேசலாம்கிற மாதிரி விஷ-வலாத்தான் பண்ணியிருக்கோம். இந்த வேலையில இருந்த அத்தனை கலைஞர்களோட ஆத்மார்த்தமான உழைப்பும் அதுக்கான மரியாதையைப் பெறணும். எனக்கு நூறு படம் பண்ணனும்கிற ஆசை இல்லை. அஞ்சு, ஆறு படம் பண்ணாப் போதும். ஆனா, அது உதிரிப்பூக்கள், பதினாறு வயதினிலே, மூன்றாம் பிறை மாதிரி மக்களோட மனசுக்குள்ள போய் உட்கார்ந்துக்கற மாதிரி இருக்கணும்!”
“சேதுவுக்கும் நந்தாவுக்கும் என்ன வித்தியாசம்?”
“சேது என் நண்பன். ஒரு காதல்ல பூத்து அதே காதல்னால அழிஞ்சு போன ஆத்மா. நந்தாவுக்கும் என்னன்னு சொல்றது… அவன் கிட்டத்தட்ட நான்தான். என் வயசுப் பசங்களுக்கு இருக்கிற கோபம், வேகம் எல்லாம் அவனுக்கும் இருக்கு தட்டுனா நெகிழ்றதும் கொட்டுனா எகிர்றதும்மான ஒரு பையன். நெஞ்சுக்குள்ள நெருப்பு எரியத் திரியற ஒவ்வொருத்தனும் நந்தாதான்”
– ரா. கண்ணன்