கொழும்பு: “சொந்தமாக இருந்த ஒரே வீடும் தீயில் எரிந்து நாசமாகிவிட்டது” என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரும் போராட்டம் அந்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமை கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். மக்களைத் தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
போராட்டக்காரர்களால் அதிபர் மாளிகை கைப்பற்றப்படுவதற்கு முன்பாகவே அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு சொந்தமான இல்லமும் முற்றுகையிடப்பட்டது. பிரதமருக்கு சொந்தமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், வீட்டிற்கும் தீவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தன் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது குறித்து ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
இது குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேசும்போது, ”எனக்குச் சொந்தமாக இருந்த ஒரே ஒரு வீடும் இப்போது முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. என்னுடைய மிகப்பெரிய செல்வமும் பொக்கிஷமுமான எனது நூலகத்தில் இருந்த 2,500 புத்தகங்களும் அழிக்கப்பட்டன. 200 வருட ஓவியமும் அழிக்கப்பட்டது. நான் சேகரித்து வைத்திருந்த ஓவியங்களும், கலை பொருட்களும் அழிக்கப்பட்டுவிட்டன. ஓரே ஒரு ஓவியம் மட்டும் மீட்கப்பட்டது” என்றார்.