ஜப்பான் மேல்சபை தேர்தல்சோகத்தில் ஓட்டு போட்ட மக்கள்| Dinamalar

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இரு தினங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட சூழலில், ஏற்கனவே அறிவித்தபடி நேற்று அந்நாட்டின் மேல்சபை தேர்தல் நடந்தது. பல இடங்களில் மக்கள் சோகத்துடன் ஓட்டு போட்டதை காண முடிந்தது.

ஜப்பான் மேல்சபையின், 124 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் மறைந்த ஷின்சோ அபேயின் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெறும் என, ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே ஷின்சோ அபேயின் உடல் நேற்று டோக்கியோவில் உள்ள அவர் வீட்டில் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட பல தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வரும் நாட்களில் அவர் உடல் அடக்கம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் ஷின்சோ அபேவை சுட்டுக் கொலை செய்த டெட்சுயா யமகாமியிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொலையாளி டெட்சுயா யமகாமி, ஒரு கிடங்கில் வாகன ஓட்டியாக இருந்துள்ளார்.

எப்போதும் அமைதியாக காணப்படும் அவர் சில மாதங்களுக்கு முன் உடல் நிலை சரியில்லை என, பணியில் இருந்து விலகியுள்ளார்.அரசியல் காரணங்களுக்காக இந்த கொலை நிகழவில்லை. யமகாமியின் தாய் ஒரு கிறிஸ்தவ சபையில் முழு ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். அதன் காரணமாக, யமகாமியின் குடும்ப வியாபாரம் நொடித்துப் போயுள்ளது. அந்த கோபத்தில் இருந்த யமகாமிக்கு, கிறிஸ்தவ சபைக்கு ஆதரவளித்த ஷின்சோ அபே மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை கொல்லும் முடிவுடன் பல நாள் காத்திருந்து திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். பாதுகாப்பு குறைபாடுகள் தான் இந்த கொலைக்கு காரணம். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.