டெல்லி மாநகர மதுபான கடைகளில் பிரபலமான பிராண்டுகள் மற்றும் பிரீமியம் ரக பீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க மறுத்தது டெல்லி உயர் நீதிமன்றம்.
கோடை காலத்தில் பீருக்கு தட்டுப்பாடு நிலவுவதை காரணம் காட்டி அரசுக்கு எதிராக மதுபான கடை உரிமையாளர் ஒருவர் கடந்த வாரம் வழக்கு தொடுத்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, மதுபான பிராண்டின் பிரபலம் என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது என்றும், ‘பிரீமியம்’ அல்லது ‘பிரபலமானது’ எது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
தட்டுப்பாடு பிரச்சனை என்பது உங்களுக்கும் உங்கள் மொத்த விற்பனையாளருக்கும் இடையே ஆனது உங்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஆனதல்ல என்றும் கூறினார்.
பாத்2வே எச்ஆர் சொலியுசன்ஸ் என்ற மதுபான சில்லறை விற்பனை நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் வழக்கறிஞர்கள் என்.பி. சிங் மற்றும் மோஹித் சிங் ஆஜரானார்கள்.
வழக்கறிஞர்களிடம் “உங்கள் மனுதாரர் எதற்கெடுத்தாலும் வழக்கு போடுகிறார். காற்று அவரது தலையில் முடியை உதிர்த்தாலும், அவர் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வருகிறார். ஒருவேளை அவர் விற்ப்பதை அவர் சாப்பிடத் தொடங்க வேண்டும்” என்று கிண்டலாக நீதிபதி கூறினார்.
ஏற்கனவே இதே மனுதாரர் புதிய கலால் கொள்கையின் கீழ் மதுபான பிராண்டுகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) நிர்ணயம் செய்யப்படுவதை எதிர்த்து ஒரு வழக்கும், மதுபான விற்பனை நிலையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி மற்றொரு வழக்கும் தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய கலால் கொள்கை அடிப்படையில் தடையின்றி மதுபானம் கிடைக்க டெல்லி அரசு உறுதி அளித்துள்ளதே தவிர எந்த ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பற்றி எதுவும் கூறவில்லை என்றும் நீதிபதி வர்மா தெரிவித்தார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இந்த கருத்தை தொடர்ந்து தங்கள் மனுவை வாபஸ் பெறுவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.